குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 விடுதலைப்புலிகள் இந்தியச் சதியால் பலியான 39ஆவது ஆண்டு நினைவு நாள் – அக்டோபர் 5, 2026 : பா.அரியநேத்திரன்

1987 செப்டம்பர் 15 உண்ணாவிரதம் இருந்து 12 தினங்களால் 1987 செப்டம்பர் 26இல் உயிர் துறந்த தியாகி திலீபனின் நினைவு ஈழதேசம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோக நாளாகவே அமைந்தது. லெப். கேணல் திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. 1987 ஜூலை 29 இலங்கை–இந்தியா ஒப்பந்தம் மூலம் ஈழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச் சதியால் மக்களுக் காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது.
இத்தோடு இந்தியத் துரோகச் சதி முடிந்துவிட் டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்த நிலையில், சோகம் தணியும் முன்னே “மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிலை” ஈழத் தமிழினத்துக்கு ஏற்பட்டது. அதுவும் இந்திய அரசின் வக்கிரப்போக்கைக் கோடிட்டுக் காட்டிய இரண்டாவது பாரிய துயரம். தியாகி திலீபன் உயிர்நீத்து சரியாக 10 நாட்களால், 1987 அக்டோபர் 05இல், யாழ்ப்பாணக் கடற்பரப்பிலே பய ணித்துக் கொண்டிருந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு விடுதலைப்புலிப் போராளிகள் கைதுசெய்யப்பட்டு, அவர்களின் சாவுகளுக்கு இலங்கை அரசும் இந்திய அரசும் காரணமாகின.
இன்று 2026 அக்டோபர் 05 அவர்கள் ஆகுதியாகி 39ஆம் ஆண்டு நினைவு நாளாகும். இலங்கை–இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களுக்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக் காட்டும் என நம்பியிருந்த மக்களுக்கு மாறாக, துன்பங்களையும் துயரங்களையுமே இலங்கை அரசும், இந்திய அரசுப் படைகளும் சுமத்தின.
1987 அக்டோபர் 03இல் யாழ். கடற்பரப்பிலே நிராயுதபாணிகளாக குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன் னிரு போராளிகள் படகில் பயணித்தனர். அன்று இலங்கைக் கடற்படையினரால் அவர்க ளைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டு சென்று விசாரணைகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணிய இலங்கை பௌத்த பேரினவாத அரசு திட்டம் தீட்டியது.
பலாலி இராணுவ முகாமில் 12 போராளிகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட இலங்கை அரசுப் படைகள் எவ்வித பலனையும் அடைய வில்லை.
தமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசி யத் தலைவர் அவர்களின் உயிர்நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். தடுத்து வைக்கப்பட்ட போராளிகளும் எந்தத் தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில், விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்திப் பார்த்தனர்.
பன்னிரு போராளிகளையும் கொழும்பு சிறைச் சாலைக்குக் கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது.அங்கிருந்த குமரப்பா தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
கனம் தலைவர் அவர்களுக்கு,
குமரப்பா ஆகிய நான் 03.10.1987 அன்று அதி காலை 4.30 மணியளவில் சிறிலங்கா கடற்படையால் பருத்தித்துறை கடலுக்கு மேலாக வைத்துக் கைது செய்யப்பட்டேன். பின்பு காங்கேசன்துறை முகாமிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு இந்திய அமைதிப்படையினரின் கண்காணிப்பிலும், இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிலும் இருக்கிறேன்.
மேலும் என்னைக் கொழும்பிற்குக் கொண்டு செல்ல நேரிடலாம். நான் இலங்கை அரசாங்கத்தின் சட்டங்களை அங்கீகரிக்கவில்லை. என்னைக் கொழும்பு கொண்டு செல்ல நேரும் பட்சத்தில் என்னை முழுமையாக அழித்துக் கொள்ளச் சித்தமாயுள்ளேன்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
இவ்வாறு குமரப்பா, யாழ். மாவட்ட தளபதி, தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
1987 அக்டோபர் 05இல் பலாலி இராணுவ முகாமில் இருந்து கொழும்புக்கு அந்த 12 போராளிகளையும் கொண்டு செல்ல இராணுவம் முயற்சிகளை மேற்கொண்டபோது, 12 போராளிகளும் நஞ்சை (சயனைட்) அருந்தி பலாலி மண்ணில் உயிர்களைத் தியாகம் செய்தனர்.
அந்த 12 விடுதலைப்புலிகளின் முழுமையான விபரம்:
1. யாழ். மாவட்ட தளபதி
    லெப். கேணல் குமரப்பா
    (பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
2. திருமலை மாவட்ட தளபதி
    லெப். கேணல் புலேந்திரன்
    (குணநாயகம் தருமராசா – பாலையூற்று, திருகோணமலை.)
3. மேஜர் அப்துல்லா
    (கணபதிப்பிள்ளை நகுலகுமார் – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.)
4. கப்டன் பழனி
    (பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
5. கப்டன் கரன்
    (வைத்திலிங்கம் மனோகரன் – சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.)
6. கப்டன் மிரேஸ்
    (தவராஜா மோகனராஜா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
7. கப்டன் நளன்
    (கணபதிப்பிள்ளை குணேந்திரராஜா – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.)
8. லெப்டினன்ட் அன்பழகன்
    (தேசோமயானந்தம் உத்தமசிகாமணி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
9. லெப்டினன்ட் தவக்குமார்
    (சோமசுந்தரம் பாக்கியராஜா – முள்ளியான், யாழ்ப்பாணம்.)
10. 2ம் லெப்டினன்ட் ரெஜினோல்ட்
    (கபிரியேல் பேனாட் மரியநாயகம் – முள்ளியான், யாழ்ப்பாணம்.)
11. 2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார்
    (ஞானபிரகாசம் பிரான்சிஸ் அலோசியஸ் – மணற்காடு, யாழ்ப்பாணம்.)
12. கப்டன் ரகுவப்பா
    (இராஜமாணிக்கம் ரகுமான் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
வீரச்சாவடைந்த பன்னிரு விடுதலைப்புலிகளின் வித்துடல் களும் யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகரசபைப் பகுதியில் அமைந்துள்ள தீருவில் ஊருக்கு எடுத்து வரப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள், போராளி கள் முன்னிலையில் அக்கினியில் சங்கமமாகின.
காந்தி தேசத்துக்குக் காந்தியின் காந்தீயம் புரியும் என நினைத்தது திலீபன் மட்டுமல்ல. ஈழத் தமிழினமே நம்பிக்கையோடு திலீபனின் தவம் பலித்துத் தமிழீழ வரம் கிடைக்கும் என இலவு காத்த கிளியாகக் காத்திருந்தது. வந்து பார்த்துப் போன இந்தியத் தூதுவர் டிக்ஸிற்றும் இந்தியத் தூதுவராக நடக்காது ஜே.ஆரின் சிங்களத் தூதுவராகவே நடந்து கொண்டார். திம்புவில் பேசியதும் தமிழர் தரப்பை இந்தியா தண்டிக்க முயன்றதும் தமிழரது நியாயமான கோரிக்கைகள் சேரும் இடம் குப்பைக் கூடைதான் என்பதை உணரத் தவறிய இனமாகத் தமிழினம் மாறிவிட்டது.
திலீபனின் உயிரைக் குடித்த அதே இலங்கை–இந்திய ஒப்பந்தமும், இந்தியாவின் மீதுள்ள மதிப்பும் மீண்டும் கரங்களைக் கட்டிய காரணத்தால் இந்தப் 12 பேரும் சிங்களத்தின் சிறைக் கைதிகளாயினர். அவர்களைச் கொழும்புக்குக் கொண்டு போய் விசாரணை என்ற பெயரால் சித்திரவதை செய்ய முற்பட்ட சிங்களத்தை இந்தி யப் பேரரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை, அல்லது விரும்பவில்லை.
இந்திய அரசுடன் 1987 ஜூலை 29ஆம் திகதி செய்து கொண்ட ஒப்பந்த விதிகளின்படி தமிழீழ விடுதலைப் புலிகள் தற்காப்புக்காக ஆயுதங்கள் வைத்திருப்பதை அனுமதிக்கிறது எனச் சுட்டிக் காட்டியும் பயனற்றதால், 12 பேரும் அக்டோபர் 05ஆம் திகதி நஞ்சுக் குப்பியைக் கடித்தனர்.
தியாகி திலீபனின் உண்ணாவிரதத்தை ஏற்காத இந்தியச் சதி, லெப்டினன்ட் கேணல் குமரப்பா மற்றும் லெப்டினன்ட் கேணல் புலேந்திரன் உட்பட 12 விடுதலைப் புலிகளை இலங்கைப் படையினரிடம் இந்திய அரசு ஒப்படைக்க நினைத்த சதி, இந்த இரண்டு சதிகளினால்தான் 1987 அக்டோபர் 10இல் இந்திய அமைதிகாக்கும் படைக்கும் (IPKF) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையே முறையான முழுப் போர் தொடங்கியது.
1987,அக்டோபர்,10, இல் இந்திய படையுடன் ஆரம்பித்த போரை விடுதலைப்புலிகள் முதலாம் கட்ட ஈழப்போர் என பெயர் சூட்டினர். அதற்கு முன்னம் நடந்தவை கள் கெரில்லா தாக்குதல் (கரந்தடித்தாக்குதல்கள்) என்பதே உண்மை.
இந்திய இராணுவம் 1965ல் பாகிஸ்தானுடன் நடந்த போர் 22 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. 1971இல் வங்கதேசத்தை உருவாக்கிய போர் 14 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் 1987இல் அமைதிப்படை ஈழத்தில் நடத்திய போர் இரண்டரை வருடங்கள் நடைபெற்றது.
அதுவும் நாள் ஒன்றுக்கு ஆறு கோடி ரூபா வீதம் 5400 கோடி ரூபா செலவு செய்து நடத்தியது. இந்தியா வில் ஒரிசா மாநிலத்தில் வரலாறு காணாத வறட்சியில் விவசாயிகள் செத்துக்கொண்டிருந்த வேளை, இலங்கையி ல் இந்திய அமைதிப்படை 5400 கோடி ரூபா செலவு செய்து போர் நடத்தியது. இந்த இந்திய அமைதிப்படையினரால் 10,000இற்கும் மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 800க்கும் அதிகமான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். பல கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துகள் சேதமாக் கப்பட்டன.
இன்று 2026 அக்டோபர் 05, 39 ஆண்டுகள் கடந்தும் இலங்கை–இந்திய ஒப்பந்தத்தால் மாகாணசபைத் தேர் தலைக்கூட நடத்த முடியாமல் இந்திய அரசும் திண்டாடுவதே வரலாறு.