சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வலிகாமம் வடக்கு மக்கள் தொடர் போராட்டம்!

வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது சொந்தக் காணிகள் மற்றும் வீடுகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் பலாலி சந்தியில் இன்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டம், இன்றைய தினத்துடன் தொடர்ச்சியாக 16ஆவது வாரத்தை எட்டியுள்ளது.

கடந்த 36 வருடங்களாகத் தமது சொந்த நிலங்களை இழந்து, வீடற்ற நிலையில் அல்லல்பட்டு வருவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தங்களுக்குச் சொந்தமான காணிகளில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டும், வர்த்தக நிலையங்களை அமைத்தும் பயன்படுத்தி வரும் சூழலில், நீண்டகாலமாக வீடுகளும் நிலங்களும் இன்றி தவிக்கும் தங்களது சொந்த வீடுகளையும் காணிகளையும் தாமதமின்றி விடுவிக்க வேண்டும் என அவர்கள் இந்தப் போராட்டத்தின் மூலம் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.