தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை வளாகத்திற்குள் மேலும் புதிய கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரும், குறித்த விகாரைக்காகக் காணி ஆக்கிரமிக்கப்பட்ட உரிமையாளர்களில் ஒருவருமான சாருஜன் தெரிவித்துள்ளார்.
விகாரை அமைந்துள்ள பகுதியில் புதிய கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, பிரதேச சபை தவிசாளர் மற்றும் சக உறுப்பினர்களுடன் இணைந்து தாம் சம்பவ இடத்தைப் பார்வையிடச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அங்கிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் தம்மை விகாரை வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படும்” என அரசாங்கம் கூறி வருகின்ற போதிலும், புதிய அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை காணிகள் விடுவிக்கப்படவில்லை என சாருஜன் கவலை வெளியிட்டார்.
காணி விடுவிப்பு இடம்பெறாத சூழலில், விகாரை நிலப்பரப்பிற்குள் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்ட அவர், இச்சட்டவிரோதப் பணிகளை அரசாங்கம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


