ஊழல்வாதிகள் அடுத்தடுத்து சிறைக்குச் செல்வது உறுதி : க. இளங்குமரன் தெரிவிப்பு

ஊழல் செய்தவர்கள் மற்றும் மக்களுக்குத் துரோகம் இழைத்தவர்கள் எத்தகைய உயர் பதவிகளில் இருந்திருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறை செல்வது தவிர்க்க முடியாதது என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, அம்பாள் நகர் சாந்தபுரம் கிராமத்திற்கான மக்கள் சந்திப்பும் வட்டார சபை தெரிவும் இன்று (3) பகல் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் சாதாரண பெற்றோர்கள் பிள்ளைகளைப் பார்க்கச் சிறை சென்ற நிலைக்கு மாறாக, இன்று உயர் பதவிகளிலிருந்து சுகபோகங்களை அனுபவித்தவர்கள் நீதிமன்றங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் செல்லத் தொடங்கியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஊழலில் ஈடுபட்ட பலர் தாங்கள் கைது செய்யப்படக்கூடும் என்பதை உணர்ந்தே தற்போது நீதிமன்றங்களில் முன் பிணை கோரி நிற்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் எதிர்க்கட்சியினரும் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் கீழ் எதிர்காலத்தில் இன்னும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் எச்சரித்தார்.

இதேவேளை, சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை மீட்பதில் அரசாங்கம் மிகக் கரிசனையுடன் செயல்பட்டு வருகிறது.

ஜனாதிபதி மீது நம்பிக்கை இருப்பதாகவும், அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.