தியாகச்சுடர் தீலீபனின் 12 ம் நாள் நீங்கா நினைவு, அதுதான் 26/09/1987 ல் இந்திய அரசின் முகத்திரை கிழிந்த நாள்..அன்று சனிக்கிழமை!
இன்று-26/09/2026,ம் சனிக்கிழமை -39 வது ஆண்டு நினைவை அனுஷ்டிக்கிறோம்..
26.09.1987, சனிக்கிழமை பன்னிரண்டாம் நாளில், திலீபனின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்ற செய்தி யாழ் பகுதி முழுவதும் பரவியது. 12 தினங்கள் 265 மணி நேரம் நீரின்றி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி, தனது சுயநினைவு தப்பினாலும் குளுக்கோஸ், நீர் தந்துவிடாதீர்கள் என்று கூடியிருந்தோரிடம் சத்தியவாக்கு வாங்கிக்கொண்டு புழுவாய்த் துடித்த திலீபனின் உயிர் அன்று காலை 10.48 மணிக்குப் பிரிந்தது.
தியாக தீபம் திலீபனின் வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவரது உடல்நிலையை கண்காணித்து, அவர் மறைந்த பிறகு அவரது உடலைப் பரிசோதித்து மரணத்தை உறுதி செய்தவர் மருத்துவர் சிவகுமார் ஆவார்.
1987 செப்டம்பர் 26 அன்று காலை 10.48, மணிக்கு மருத்துவர் சிவகுமார் தியாகி திலீபனுடைய நெஞ்சில் இதயத்துடிப்பு மானியை ( stethoscope) வைத்துப் பரிசோதித்து, சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு நின்றுவிட்டதை உறுதி செய்துவிட்டு தியாகி திலீபனின் பாதங்களைத் தொட்டு வணங்கி தனது இறுதி முடிவை கவலை தோய்ந்த முகத்துடன் அறிவித்தார்.
எங்கும் அழுகை… விம்மல்… இலங்கை இந்தியா எதிர்ப்புக் குரல் எழுந்தது.
உடலம் பாதுகாப்பு செய்வதற்காக (எம்பார்ம் Embalm) யாழ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடல், அன்று (1987, செப்டம்பர் 26,)பிற்பகல் 4.15 மணியளவில் மக்களது அஞ்சலிக்காக நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலிலும், சுதுமலை அம்மன்கோயில் முன்றலிலும் 1987, செம்டம்பர்,28, பி. ப 4, மணிவரை இரண்டு தினங்கள் வைக்கப்பட்டது.
ஈரோஸ் தலைவர் பாலகுமார், பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதனர். தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மனிதநேயம் தழைக்கும் இடத்தில்தான் அகிம்சை வெல்லும் என்பது திலீபன் மரணம் மூலம் உலகுக்கு உணர்த்தப்பட்டது.
விடுதலைப்புலிகள் தலைவர் மேதகுவால் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை வழங்கப்பட்டது.
தியாகி திலீபனின் உடலம் அவருடைய விருப்பத்துக்கு அமைவாக 1987 செப்டம்பர் 28 அன்று பி.ப. 4.30, மணியளவில் உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் முறைப்படி கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கப்பட்ட புகழ் உடலம் அங்கு பாதுகாக்கப்பட்ட உடல், 1995 வரை யாழ் மருத்துவ பீடத்தில் இருந்தது பின்னர் அங்கிருந்தது. 1995இல் யாழ்ப்பாணத்தை விட்டு விடுதலைப் புலிகள் வெளியேறிய போது கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. போர்ச்சூழல் காரணமாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் பாதுகாக்கப்பட்ட வந்த அவர் உடல், இறுதியாக 2009 ஏப்ரல் மாதத்தில் மாத்தளன் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது..!
1987,ல் 24, அகவை இளைஞன் தியாகி திலீபனின் தியாகம் என்பது உலகத்தில் எவரும் செய்யாத உச்சத்தியாகம்..
இன்று 2026, செப்டம்பர்,26, ல் அவர் உயிரோடு இருந்திருந்தால் 63, அகவையுடன் ஒரு வைத்தியராக மணம் முடித்து குடும்பம் பிள்ளைகளுடன் வாழ்ந்திருப்பார். அல்லது புலம் பெயர் நாடொன்றில் சகல வசதி வாய்புடனும் வாழ்ந்திருப்பார். அல்லது ஒரு அரசியல்வாதியாக நாடாளுமன்ற உறுப்பினராக கூட வந்திருப்பார்..
சிந்தியுங்கள்..!
எமது இனம், எமது நிலம், விடுதலை பெறவேண்டும் என்ற இலட்சியத்தாகத்தை மனதார நேசித்த இளைஞன் தியாகி திலீபன் அருடைய இலட்சியம் நிறைவேற அனைத்து தமிழர்களும் உழைப்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி..!
தியாகிகள் சாகலாம்..!
தியாகம் சாகாது..!
பா.அரியநேத்திரன்



