இலங்கையின் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை ஒரு இயற்கை அனர்த்தத்தின் பாதிப்புகளுக்குள் மாத்தி ரம் சுருக்கிப் பார்ப்பது, பல தசாப்தங்களாக நீடித்து வரும் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளின் ஆழத்தை மறைத்துவிடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. தித்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் மலையகப் பகுதிகளில் வாழும் மக்களின் வீடுகள், வாழ் வாதாரங்கள் மற்றும் பாதுகாப்பில் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது.
ஆனால், அந்த அனர்த்தத்துக்கு முன்னரே மலையகத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்த காணியுரிமை, வீட்டுரிமை, தொழிலாளர் உரிமை, குறைந்த வருமா னம், சமூகப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், மொழி மற்றும் நிர்வாக அணுகல் போன்ற பிரச்சினைகள் அனர்த்தத்துடன் முடிவடையவில்லை. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடர் 2026 செப்ரெம்பர் 7ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு நாடுகளின் நிலைமைகள் மற்றும் விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன.
இந்தப் பின்னணியில், மலையகத் தமிழர்கள் தொடர்பான விடயங்கள் சர்வதேச மனித உரிமை அரங் கில் எவ்வாறு பிரதிபலிக்கப்படுகின்றன என்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆம் கூட்டத்தொடரில் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker Türk) சமர்ப்பித்த எழுத்துமூல அறிக்கையில் மலையகத் தமிழர்கள் குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது இயற்கை பேரிடரை மட்டுமே முதன்மைப்படுத்தியிருப்பது மலையகச் சமூகத்தின் ஆழமான அடக்குமுறைகளை மறைப்பதாக அமைந்துள்ளது.
ஏற்கனவே மலையகத் தமிழர்களின் கட்டமைப்புச் சார்ந்த ஒடுக்குமுறைகள் தொடர்பாக சர்வதேச ரீதியில் விரிவான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகளின் நவீன அடிமைத்தனம் தொடர்பிலான விசேட அறிக்கையாளர் கள ஆய்வு மேற்கொண்டு, 2022 இல் நடத்திய ஊடக சந்திப்பில், “மலையகத் தமிழர்கள் தமிழர்கள் என்பதற்காகவும், தொழிலாளர்கள் என்பதற்காகவும் ஒடுக்கப்படுகின்றனர்” என்று பகிரங்கமாகத் தெரிவித்தார். அவரின் விரிவான ஆய்வறிக்கை ஐக்கிய நாடுகள் அவையிலும் சமர்ப்பிக்கப்பட்டது.
அதேநேரம்,சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) வெளியிட்ட விரிவான அறிக்கையில், “தென் இலங்கையில் மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர்” எனும் அதிர்ச்சி அளிக்கும் உண்மையை வெளிப்படுத்தியது. இருப்பினும் இலங்கை அரசாங்கம் இந்த சர்வதேச அறிக்கைகள் எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது நடை பெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்குப் பதிலளி த்து உரையாற்றிய இலங்கை அரசின் பிரதிநிதி, ‘மலைய கத் தமிழர்கள்’ என்ற தனித்துவமான தேசிய இன அடை யாளத்தைக் குறிப்பிடாமல் ‘மலையக மக்கள்’ என்றே பொதுப்படையாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், அவர்களின் பிரச்சினையைத் தீர்ப்ப தற்கு அரசாங்கம் ‘முற்போக்காகச் செயல்படுகின்றது’ என்றும் கூறியுள்ளார். இந்த விடயத்தை சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சமூக நீதிக்கான செயற் பாட்டாளரும், மலையக ஆய்வு மையத்தின் இணைப் பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல், “தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் அவ லங்கள், அவர்கள் தமிழர்கள் என்பதற்காகவும், பெருந் தோட்டத் தொழிலாளர்கள் என்பதாலும், மொழி உரிமை மறுக்கப்பட்டதாலும், சொந்த நிலமின்மையினாலும், பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அரசாங்க நிர்வாகத்தின் கீழ் முடக்கப்பட்டிருப்பதாலும் உருவானவை ஆகும்.
இந்த அடிப்படை உண்மை ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்படாமை மிகுந்த வேதனையளிப்பதாக அமைகின்றது” என்று தெரிவித்துள் ளார். மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினை சர்வதேச சமூகத்தை சென்றடைய வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. மலையக மக்களின் அவல நிலை என்பது ஏதோ ஒரு புயலால் உருவான தற்காலிகப் பிரச்சினை அல்ல. அது இரண்டு நூற்றாண்டுகளாகத் தொடரும் திட்டமிட்ட முறையான உரிமையின்மையின் விளைவாகும். அவற்றுள் மிக முக்கியமான அடிப்படைப் பிரச்சினைகளும் அடங்குகின்றன.
அதன்படி, மலையகப் பெருந்தோட்ட மக்கள் இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்திற்கு உழைத்த போதிலும், அவர்கள் வசிக்கும் நிலம் பெருந் தோட்டக் கம்பனிகள் அல்லது அரசின் அதிகாரத்தின் கீழ் மட்டுமே உள்ளது. தங்களின் வாழ்விடங்களுக்கான சொந்த நிலப்பத்திரமோ குடியிருப்பு உரிமையோ இன்றி முகவரியற்றவர்களாகவே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்ட 10×10 அடி அளவுள்ள குறுகிய, லயன் அறைகளிலேயே இன்றும் பெரும்பாலான குடும்பங்கள் மனித கண்ணியத்திற்கு முரணான சூழலில் வாழ்ந்து வருகின்றன.
அடிப்படை வசதிகளோ பாதுகாப்போ அற்ற நிலையே தொடர்கிறது. தோட்டங்கள் பெருந்தோட்டக் கம்பனிகளின் நிர்வாகத்தின்கீழ் இயங்குவதால், தொழி லாளர்களின் உழைப்புச் சுரண்டப்படுவதுடன், அவர்களின் வாழ்வியல் முடிவுகளைக் கம்பனி நிர்வாகமே தீர்மானிக்கும் அடிமைத்துவச் சூழல் நிலவுகிறது. மலையகப் பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் தமிழ் மொழி மூலமான சேவைகள் இன்மை காரணமாக, கம்பனி மற்றும் அரசு நிர்வாக மட்டத்தில் தங்களின் அன்றாடப் பிரச்சினைகளைக் கூடத் தீர்த்துக் கொள்ள முடியாதவர்களாக மக்கள் முடங்கியுள்ளனர்.
இந்நாட்டில் வாழும் தனித்துவமான பண்பாடும் வரலாற்றுப் பின்புலமும் கொண்ட மலையகத் தமிழர்களை, இந்நாட்டின் பிரஜைகளாகவோ அல்லது மனிதர்களாகவோ ஏற்க மறுத்து, வெறும் “தொழிலாளர்கள்” என்ற பொருளாதாரப் பண்டமாக மட்டுமே அரசு பார்க்கிறது. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மாறாக, 2042 இல் முடிவடையவுள்ள அரசாங்கத்திற் கும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் இடையிலான குத்தகை ஒப்பந்தத்தில் சில திருத்தங்களைச் செய்து அதை மேலும் நீடிக்க உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை தனித்துவமான வரலாற்று மற்றும் சமூகப் பின்னணியுடன் பதிவு செய்யாமல், பொதுவான “வறுமை”, “பெருந்தோட்ட மக்கள்”, “பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள்” என்ற பொதுப் பிரிவுகளுக்குள் மட்டுமே அடக்கிவிட்டால், குறிப்பிட்ட உரிமைப் பிரச்சினைகள் மறைந்து போகும் வாய்ப்பு உள் ளது. மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்வது என்பது வெறுமனே அர சாங்கத்தை குற்றம் சாட்டுவதற்கான நடவடிக்கையாக இருக்க வேண்டியதில்லை.
அதற்குப் பதிலாக, ஆதாரங்களுடன் கூடிய மலை யக மனித உரிமை நிலை அறிக்கை ஒன்றை உருவாக்கு வது பயனுள்ளதாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அண்மையில் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கை, மலையகத் தமிழ் தொழிலாளர்களின் நிலையை சர்வதேச மனித உரிமை விவாதத்துக்குள் கொண்டு வந்துள்ளது. அந்த அமைப்பின் ஆய்வு, தென் மாகாணத்தில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களது உரிமைகள், கட்டாயத் தொழிலுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடிய நடைமுறைகள், குடி யிருப்பு பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் நீதியை அணுகுதல் உள்ளிட்ட விடயங்களைப் பதிவு செய்துள்ளது.
இத்தகைய சர்வதேச ஆவணங்கள் இருக்கும்போது, மலையக மக்களின் பிரச்சினைகளை இலங்கை அரசாங்கம் மற்றும் மலையக அரசியல் பிரதிநிதிகள் மட்டத்திலான விவாதத்துக்குள் மட்டும் வைத்திருப்பது போதுமானதா என்ற கேள்வி எழுகிறது. இது ஐ.நா. மனித உரிமை பேரவையின் கவனத்துக்கு தொடர்ச்சியாக கொண்டு செல்லப்பட வேண்டிய விடயமாக மாறுகிறது.
மலையகத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து பேசும்போது, கல்வி, சம்பளம், வீடமைப்பு, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகிய அனைத்தும் முக்கியமா னவை. ஆனால் இவற்றுடன் இணைந்து நிரந்தர காணியுரிமை என்ற கேள்வியும் பிரதானமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மலையக மக்களின் குரல் சர்வதேச அளவில் வலுவான ஆவணமாக மாறும். தித்வா புயல் மலையக மக்களின் பலவீனங்களை உலகிற்கு வெளிப்படுத்தியிருக்கலாம்.
ஆனால் தித்வா மலையகத்தின் பிரச்சினையை உருவாக்கவில்லை. புயலுக்கு முன்பே இருந்த காணியின்மை, பாதுகாப்பற்ற குடியிருப்புகள், தொழிலாளர் உரிமை பிரச்சி னைகள் பல ஆண்டுகளாகவும் தலைமுறைகளாகவும் உருவாகிய கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகளாகும். மலை யகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதார வரலாற்றில் மறுக்க முடியாத பங்களிப்பைச் செய்த சமூகமாக இருக் கின்றனர். தேயிலைத் தொழிற்றுறையின் வளர்ச்சியு டன் அவர்களின் பல தலைமுறைகளின் உழைப்பு பின்னிப் பிணைந்துள்ளது. ஆனால் ஒரு சமூகத்தின் பங்களிப்பை மட்டும் பதிவு செய்வது போதாது.
அந்த சமூகத்திற்கு நிலம் உள்ளதா?பாதுகாப்பான வீடு உள்ளதா? நிரந்தர குடியிருப்பு உரிமை உள்ளதா? நியாயமான தொழில் உரிமை உள்ளதா?சமூகப் பாதுகாப்பு உள்ளதா? மொழியில் நீதி கிடைக்கிறதா? அரச சேவைகளை சமமாகப் பெறுகிறதா? பேரிடர் நேரத்தில் பாதுகாப்பு கிடைக்கிறதா? அடுத்த தலைமுறைக்கு சொத்து மற்றும் பாதுகாப்பை வழங்கும் வாய்ப்பு உள்ளதா?என்பனவே ஒரு நாட்டின் மனித உரிமை நிலையை அளவிடும் கேள்விகளாக இருக்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்கு முழுமையான பதில் கிடைக்காத வரை, மலையகத் தமிழர்களின் பிரச்சினையை தித்வா புயல் அனர்த்தத்துடன் மட்டும் இணைத்துப் பார்ப்பது போதுமானதாக இருக்காது.
எனவே மலையகத் தமிழர்களின் காணியுரிமை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து தொடர்ச்சி யான, ஆதாரபூர்வமான மற்றும் தனித்துவமான மனித உரிமை கண்காணிப்பு சர்வதேச மட்டத்தில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் அடுத்தடுத்த கூட்டத்தொடர்களில் மலையகத் தமிழர்களின் நிலைமை தொடர்பாக விரிவான தகவல்கள், தரவுகள் மற்றும் சாட்சியங்கள் முன்வைக்கப்படுவது, இந்த விவகாரத்தை ஒரு தற்காலிக அனர்த்தப் பிரச்சினையாக அல்லாமல் நீண்டகால உரிமைப் பிரச்சினையாகப் புரிந்துகொள்ள உதவக்கூடும்.



