இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்க கோரிக்கை

இஸ்லாம் போதிக்கும் நற்பண்புகளின் அடிப்படையில் சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பது குறித்துப் பரிசீலியுங்கள். இத்தகைய கருணைமிகு செயல் இலங்கை மக்களால் பெரிதும் போற்றப்படும் என்பதுடன், இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால பரஸ்பர நட்பு மற்றும் கௌரவத்தை மேலும் வலுப்படுத்தும் என சவூதி அரேபிய தலைமைத்துவத்திடம் 5 ஊடகவியலாளர் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருடகால சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது விடுதலைக்கான கோரிக்கையை முன்வைத்து சுதந்திர ஊடக இயக்கம், தெற்காசிய பெண்கள் ஊடக வலையமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஆகிய ஊடகவியலாளர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு கருணை காண்பித்து, பொதுமன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அனோஜனின் வழக்கு தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சவூதி அரேபிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, அவரது நலனை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சகல உதவிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு நாம் மதிப்பளிக்கும் அதேவேளை, இது மிக ஆழமான மனிதநேயம் சார்ந்த பரிமாணத்தையும் கொண்டிருக்கிறது எனக் கருதுகிறோம்.

அதன்படி சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் என இலங்கையின் பல்லின சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடக அமைப்புக்கள் என்ற ரீதியில் சகல மதங்கள் மீதான கௌவரத்தையும் மத நல்லிணக்கத்தையும் பொறுப்புடனான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் அமைதியான சகவாழ்வையும் உறுதிப்படுத்துவதற்கான எமது கூட்டு அர்ப்பணிப்பை மீளவலியுறுத்துகிறோம். அதுமாத்திரமன்றி கருணை, மன்னிப்பு மற்றும் மனந்திருந்துதல் என்பன இஸ்லாத்தில் மிக உயரிய இடத்தைப் பெற்றுள்ளன என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம்.

இதன் அடிப்படையிலேயே உங்களிடம் இந்த மனிதநேயக் கோரிக்கையை முன்வைக்கிறோம். சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு கோருகிறோம்.

இத்தகைய கருணைமிகு செயல் இலங்கை மக்களால் பெரிதும் போற்றப்படும் என்பதுடன், இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால பரஸ்பர நட்பு மற்றும் கௌரவத்தை மேலும் வலுப்படுத்தும்.

அத்தோடு இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கமும் அதன் இராஜதந்திர நகர்வுகளைத் தொடர்வதுடன், இதற்கு சுமுகமான தீர்வொன்றை எட்டுவதற்கு ஏதுவான சகல சட்ட மற்றும் மனிதநேய முயற்சிகளையும் முன்னெடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.