உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தினால் இன்று (22) அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட 24 பேரில், 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஏனைய 9 பேரும் இந்த வழக்கில் இருந்து முற்று முழுதாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் பிரதிவாதிகளுக்கு எதிராக 23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் நடவடிக்கை இன்று (22) நண்பகல் 12.27 க்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் ஆரம்பமானது.

இதன்போது, நீதிமன்றத்தினால் பிரதிவாதிகளுக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, பிரதிவாதிகளுக்கு மதிய உணவு இடைவேளை வழங்கப்பட வேண்டியிருந்ததால், வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் நடவடிக்கை இன்று (22) பிற்பகல் 1.45 வரை ஒத்திவைக்கப்பட்டது.

சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 8 குண்டுதாரிகளுக்குத் துணைபுரிந்தமை, சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பிற்பகல் 1:45 முதல் ஆரம்பமான தீர்ப்பை அறிவிக்கும் நடவடிக்கை இலங்கை நேரப்படி இரவு 7 மணியை கடந்தும் வாசிக்கப்பட்டு வருகின்றது.

இந்ததீர்ப்பின் தமிழ் மொழிபெயர்ப்பும் உயர் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் நீதிமன்றத்தில் தற்போது வாசிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய முழுமையான தீர்ப்பு விபரங்கள் இலங்கை நேரப்படி இன்று இரவு அல்லது நாளை (23) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.