கொரியாவின் சியோலில் நடைபெற்ற 29 ஆவது ஆசிய சட்ட மாநாட்டின் ஓரங்கமாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் அவுஸ்திரேலிய சட்டப் பேரவையும் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய மற்றும் அவுஸ்திரேலிய சட்டப் பேரவையின் தலைவர் தானியா வுல்ஃப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
1933 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, கன்பராவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் அவுஸ்திரேலிய சட்டப்பேரவையானது அவுஸ்திரேலிய சட்டத்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல தேசிய அமைப்பாகும். இவ்வமைப்பு அங்கத்துவ சங்கங்கள், சட்டத்தரணிகள் சங்கம் என்பன உள்ளிட்ட கட்டமைப்புக்கள் ஊடாக சுமார் 107,000 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
அதேவேளை அவுஸ்திரேலிய சட்டப்பேரவையானது தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் அவுஸ்திரேலிய சட்டத்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னிலையாவதுடன், நீதியை நிலைநாட்டல், நீதிக்கான அணுகல் மற்றும் சட்டக்கட்டமைப்பின் மேம்பாடு என்பவற்றை ஊக்குவிக்கும் வகையில் செயலாற்றி வருவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இருதரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக இருநாடுகளினதும் சட்டத்தரணிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், சட்டத்துறைசார் தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


