மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன், இலங்கை – இந்திய வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய முதலீட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று நேற்று வியாழக்கிழமை (17) நடைபெற்றது.
இந்தியா – இலங்கை வர்த்தகக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்தக் கலந்துரையாடல் இடமபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் ஆலோசனைக்கமைய, மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கைத்தொழில் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ரீ. ஜெயசிங்கம் மற்றும் பொருளாதார நிபுணர் எஸ். சுந்தர் தலைமையில் 40க்கும் மேற்பட்ட இந்திய முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலின் மூலம் இரு நாடுகளையும் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையில் புதிய வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.
புதிய சர்வதேச சந்தைகளை அடையாளம் காணுதல், கூட்டு வர்த்தக முயற்சிகள் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளை கட்டியெழுப்புதல் ஆகிய முக்கிய நோக்கங்களைக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, வருகை தந்திருந்த முதலீட்டாளர்கள் சுமார் 2000 கோடி ரூபாய் முதலீட்டினை மேற்கொள்ள தயாராக வந்திருப்பதாகவும், அதிலும் குறிப்பாக பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் தம்மால் உதவ முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.


