நாட்டை மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே நோக்கம்- ஜனாதிபதி

இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதைக்கு வந்துள்ளமை அண்மைய பல பொருளாதார அளவுகோள்களினால் தெளிவாகியுள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

அதேபோல், நாடு அடைந்துள்ள இந்த பொருளாதார வெற்றிகளை மக்களின் வாழ்க்கைத் தரத்தை இலகுபடுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டு பிரதானி எவன் பபகோர்ஜியோ (Evan Papageorgiou) உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.