06. ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் (16) பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் (16) தவிசாளர் ப.மயூரன் தலைமையில் நடைபெற்றது.
சபை அமர்வின் ஆரம்பத்தில் சபை மண்டபத்தில் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அக வணக்கத்துடன் தவிசாளர், உறுப்பினர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உருவ சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றன
பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் தியாக தீபத்தின் உருவ படத்திற்கு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அதேநேரம், யாழ், மாநகர சபையின் மாதாந்த அமர்வு ஆரம்பமாகுவதற்கு முன்னர் தியாக தீபத்தின் உருவ படத்திற்கு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.



