2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் சில தரப்பினரின் திட்டமிட்ட உதவியும் விரிவான சதித்திட்டப் பின்னணியும் இருந்தமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளதாக மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்து ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள முதலாவது புலனாய்வுப் படைப்பிரிவு மற்றும் மட்டக்களப்பு, கிரிதலே ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மூன்றாவது இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவு தொடர்பான விசாரணைகளிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினால் வழிநடத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘தம்பியன்’ என்ற முன்னாள் கடற்புலி உறுப்பினர் ஊடாக, சஹ்ரான் ஹாஷிம் தாக்குதலொன்றை நடத்தத் தயாராகி வருவதாகவும், வவுணத்தீவு காவல்துறை காவலரண் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சஹ்ரானே காரணம் என்றும் புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அந்தத் தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு, வவுணத்தீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மேலதிக மன்றாடியர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கர்னல் ரணவீர மற்றும் கிரிதலே இராணுவ புலனாய்வுப் படைப்பிரிவின் தலைவராக இருந்த கர்னல் மத்துமகே ஆகியோர் இந்தத் தகவல்களை புலனாய்வு பணிப்பாளரிடம் முறையாகத் தெரிவிக்காமல் மறைத்ததாகவும் மேலதிக மன்றாடியர் நாயகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கைத் தகவல்கள் உரிய முறையில் பகிரப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரைப் பாதுகாப்பதற்காக புலனாய்வுப் பிரிவின் குறிப்பிட்ட குழுவொன்று செயற்பட்டதாகவும் மேலதிக மன்றாடியர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.



