மலையக மக்களுக்கான காணி உரிமை: ஜனாதிபதியின் வாக்குறுதிகளும் தொடரும் சவால்களும்! : மருதன் ராம்

இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பொரு ளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை மனித உரி மைகளில் மிக முக்கியமானது தமக்கான சொந்த நில உரிமையாகும். 2023ஆம் ஆண்டில் பூனாகலை மற்றும் கபரகலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்து சுமார் மூன்றரை ஆண்டுகள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்த 50 குடும்பங்களுக்கு “நவோதயாபுரம்” வீட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் சமீபத்தில் கையளிக்கப்பட்டன. அத்துடன் பதுளை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் 163 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக் கப்பட்டமை முக்கிய பேசுபொருளாகவும் அமைந்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மலையக மக்க ளின் உரிமைகளைப் பாதுகாப்பதாகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகவும் பல முக்கிய வாக்குறுதிகளை வழங்கினார்.  எவ்வாறாயினும் அன்றைய தினம் அரசாங்கத்தி னால் வழங்கப்பட்ட உறுதி பத்திரம் உண்மையில் காணி உறுதி பத்திரம் தானா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மலையக மக்கள் பல தலைமுறைகளாகச் சொந்தமாக ஒரு சிறு அளவான நிலம் கூட இன்றி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதால், கடுமையான பொருளாதார, சமூக மற்றும் சட்டச் சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். சொந்தமாகச் சட்டப்பூர்வமான காணி உறுதிப் பத்திரம் இல்லாததால், மலையக மக்களால் வங்கிகளில் அதனைப் பிணையமாக வைத்து முறையான கடன் வசதிகளைப் பெற முடிவதில்லை. இதனால் சுயதொழில் தொடங்கவோ, பிள்ளைகளின் மேற்படிப்புக்கோ அல்லது அவசரத் தேவைகளுக்கோ தனியார் வட்டிக்குக் கடன் கொடுப்போரிடம் சென்று பெரும் கடன் சுமையில் சிக்கிக் கொள்கின்றனர்.
காணி உரிமை பெருந்தோட்ட நிறுவனங்களின் வசமிருப்பதால், உள்ளூராட்சி மன்றங்கள் அல்லது பிரதேச செயலகங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர், மின்சாரம், வீதிப் புனரமைப்பு மற்றும் அரச வீட்டுத் திட்டங்களுக்கான மானியங்களைப் பெறுவதில் பெரும் சட்டத் தடைகள் ஏற்படுகின்றன. கம்பனிகளின் அனுமதி இன்றி எவ்வித நிரந்தரக் கட்டுமானங்களையும் செய்ய முடிவதில்லை. உதாரணத்துக்கு தமக்கான மலசலக்கூடம் ஒன்றை அமைப்பதற்கு கூட பெருந்தோட்ட மக்கள் தோட்ட கம்பனிகளின் அனுமதியை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சொந்த நிலம் இல்லாததால், தமக்கென்று ஒரு நிரந்தர முகவரியைப் பெறுவதில் சிரமம் நிலவுகிறது. இது தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் வாக்காளர் பதிவுகளின் போது பல சிக்கல்களைத் தோற்றுவிக்கிறது. “தோட்டத்தில் பிறந்து, தோட்டத்தில் வேலை செய்து, தோட்டத்திலேயே மடியும்” லயன் அறை சுழற்சியிலிருந்து அவர்களால் வெளியேற முடியாமல் போகிறது. மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக மாற்று நிலங்களை ஒதுக்குவதில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இழுபறி நிலை காணப்படுகிறது.
இதனால் பூனாகலை மக்களைப் போலப் பல குடும்பங்கள் தற்காலிக முகாம்களிலும் பாதுகாப்பற்ற இடங் களிலும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் பூனாகலை மற்றும் கபர கலை மக்களுக்கு ஜனாதிபதி தலைமையில் காணி உறுதி பத்திரங்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் இதன்போது ஜனாதிபதியினால் அளிக்கப்பட்ட வாக்குறுதி கள் கவனிக்கத்தக்க விடயமாக மாற்றமடைந்தன.
காணி உரிமை இன்றி சவால்களை எதிர்நோக்கும் மலையக மக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனாதிபதி தனது உரையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இந்நாட்டின் பொரு ளாதாரத்திற்குப் பங்களிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சிறந்த வாழ்க்கையை உரித்தாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும், லயன் வாழ்க்கையிலிருந்து மலையக மக்களை வெளியேற்றி கௌரவமான வாழ்வை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் 2042 ஆம் ஆண்டளவில் நிறைவடையும் கம்பனிகளுடனான குத்தகை ஒப்பந்தங்களை மறுபரி சீலனை செய்து, அடுத்தகட்ட ஒப்பந்தங்களில் மலையக மக்களின் காணி மற்றும் குடியிருப்பு உரிமைகளைப் பாதுகாக்கும் சரத்துகள் கட்டாயமாகச் சேர்க்கப்படும் என்றார். இவைதவிர, மத்திய மலைநாட்டையும் அதன் சூழலையும் பாதுகாப்பதற்காக, பல்வேறு திணைக்களங்களின் அதி காரங்களை ஒருங்கிணைத்து “மத்திய மலைநாட்டுப் பாதுகாப்பு அதிகாரசபை” ஒன்றை உருவாக்குவதற்கான சட்டமூலம் விரைவில்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் குறிப்பிட்டார். அதேநேரம், வரவுசெலவுத் திட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், சிறுவர் மந்தபோஷணையைத் தடுக்கவும் கல்வியை மேம்படுத்தவும் விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி‌ உறுதியளித்தார். ஜனாதிபதியின் இந்த வாக்குறுதிகள் ஒருபுறமிருக்க, பாராளுமன்றத்தில் உரை யாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், பூனாகலை மக்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் அரசாங்கத்தின் பெருந்தோட்டக் கொள்கை குறித்துப் பல அதிரடி கேள்விகளை எழுப்பினார்.
மேலும், இது தொடர்பாகத் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலும் இந்த விடயங்களை ஆழமாக விளக்கியுள்ளார். பாராளுமன்ற விவாதத்தின் போதும் தனியார் ஊடகச் செவ்வியிலும் சுட்டிக்காட்டிய அவர், சமீபத்தில் வழங்கப்பட்ட ஆவணங்கள் உண்மையான “காணி உறுதிப் பத்திரங்கள்” அல்ல என்றும், அவை பெருந்தோட்ட நிறுவனங்கள் அல்லது அமைச்சுடன் செய்யப்பட்ட “புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” மட்டுமே என்றும் தெரிவித்தார்.
பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் குத்தகைக்கு உள்ள நிலங்களில் சட்டப்பூர்வமான பூரண காணி உரிமையை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க முடி யாத சட்டச் சிக்கல்கள் நிலவுவதால், மக்களுக்கு வழங்கப் பட்டது வெறும் பயன்பாட்டு ஒப்பந்தம் தானா என்ற ஐயத்தை அவர் பகிரங்கமாக எழுப்பினார். இதுகுறித்து பாராளுமன்றத்தில் விரிவாக சுட்டிக்காட்டிய அவர், காணி உறுதி பத்திரத்துக்கும் அரசாங்கத்தால் அண்மையில் வழங்கப்பட்ட ஆவணத் துக்கும் இடையிலான வேறுபாடுகளை விளக்கியிருந்தார்.
அண்மையில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணத்தின்படி, வீடுகளைப் பெற்ற மக்களுக்கு குறித்த வீடுகள் சொந்தமில்லை என்ற விடயம் புலப்படுவதாகவும் காணிகள் அரசாங்கத்துக்கே சொந்தமானவை என்ற அடிப்படையில் அவை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார். காணி உறுதி பத்திரம் மாத்திரமின்றி 2042 ஆம் ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முயற்சி குறித்தும் அவர் விமர்சித்துள்ளார். பெருந்தோட்ட நிறுவனங்களுடனான நிலக் குத்தகை ஒப்பந்தங்கள் 2042-ஆம் ஆண்டே நிறை வடைகின்றன.
அவ்வாறிருக்க, அந்த ஒப்பந்தக் காலத்தை மேலும் நீட்டிப்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதா? என்று ஜீவன் கேள்வி எழுப்பினார். மக்களின் நில உரிமையை மீட்டெடுப்பதாகக் கூறும் அதேவேளையில், கம்பனிகளுக்குக் குத்தகைக் காலத்தை நீட்டித்துக் கொடுக்க முயல்வது மலையக மக்களின் காணி உரிமையை மேலும் தாமதப்படுத்தும் செயல் என அவர் கண்டித்தார்.
தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சி காலம் 2029 ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளது. இவ்வாறிருக்க 2042 ஆண்டு நிறைவடையுள்ள குத்தகை ஒப்பந்தத்தை நீட்டிக்கும் தீர்மானத்துக்கான காரணம் குறித்து ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்படி, மலையக மக்கள் தொடர்ந்தும் தற்காலிக உரிமைகளுடனும் புரிந்து ணர்வு ஒப்பந்தங்களுடனும் வாழ முடியாது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பெருந்தோட்ட ஒப்பந்தங்களை மாற்றியமைக்கவும், மலையக மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் காட்டியுள்ள அரசியல் விருப்பம் வரவேற்கத்தக்கது.
எனினும், “காணி உறுதிப் பத்திரம்” என்ற பெயரில் வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கி மக்களை ஏமாற்றும் கடந்த கால அரசியல் கலாச்சாரம் இனி தொடரக் கூடாது. அதேபோல 2042 ஆம் ஆண்டு குத்தகை ஒப்பந்த நீட்டிப்பு என்ற பெயரில் கம்பனிகளுக்குச் சாதகமான முடிவுகள் எடுக்கப்படாமல், மலையக மக்கள் வெறும் குத்தகைக்காரர்களாக அல்லாமல், இந்நாட்டின் ஏனைய பிரஜைகளைப் போல முழுமையான மற்றும் சட்டப்படி செல்லுபடியாகும் காணி உறுதிப் பத்திரங்களைக் கொண்ட உண்மையான நில உரிமையாளர்களாக மாற்றப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.