மயிலத்தமடு – மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் நடத்திவரும் போராட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இன்றைய தினம் (15) சித்தாண்டியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
சித்தாண்டி சந்திக்கு அருகில் முகாமிட்டு மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மயிலத்தமடு – மாதவனை பகுதியில் சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அத்துமீறிய செயற்பாடுகள் இதுவரை தடுத்து நிறுத்தப்படாத நிலையில் மேய்ச்சல் தரை காணிகள் இல்லாமல்போகும் நிலையில் கால்நடைகள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த நீதி கோரிய போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதோடு, 1095 நாளையொட்டி இந்த கவனயீர்ப்பு போராட்டம் பண்ணையாளர்களினால் நடத்தப்பட்டது.
இதன்போது “மகாவலியே வெளியேறு”, “எமது நிலம் எமக்கு வேண்டும்”, “கால்நடைகளின் நிலத்தை அபகரிக்காதே”, “கால்நடைகளின் மேய்ச்சல் நில அபகரிப்பினை தடுத்து நிறுத்து”, “தமிழருக்கு ஒரு சட்டம், சிங்களவருக்கு ஒரு சட்டமா? சட்டத்தினை சமமாக அமுல்படுத்து”, “ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்”, “மகாவலியே மௌனம் காப்பது ஏன்?”போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



