செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் இலங்கை அரசின் தலையீடற்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியம் என்பது உள்ளடங்கலாக தமிழ் மக்களின் நலன் சார்ந்த பல்வேறு விடயங்களை வலியுறுத்தி தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 600க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து சுயாதீனமான முறையில் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டிய சர்வதேச விசாரணை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் (13) மு.ப 10 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்துக்கு அருகாமையில் உள்ள கைலாசப்பிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பமாகவுள்ள பேரணியில் சகலரையும் பங்கேற்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மக்கள் பேரணி கோவில் வீதி ஊடாகச் சென்று முத்திரைச் சந்தியில் உள்ள கிட்டு பூங்காவைச் அடைந்து, அங்கு பொதுக்கூட்டமொன்று நடைபெறும்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை சுமார் 600க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழினப் படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளன. இந்தச் சான்றுப்பொருட்கள் இக்குற்றத்தை இழைத்த தரப்பான இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதானது, அவற்றை சேதப்படுத்திக் குற்றங்களை நிரூபிக்க இயலாத சூழலை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது’ எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி, ‘குற்றம் இழைத்த தரப்பான இலங்கை அரசின் தலையீடுகள் எவையும் அற்ற வகையில் செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி உள்ளிட்ட சகல மனிதப் புதைகுழிகளினதும் அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தல், அதற்கென சர்வதேச தடயவியல் நிபுணர்களைப் பணியில் ஈடுபடுத்தல் மற்றும் அகழ்ந்தெடுக்கப்படும் சான்றுப்பொருட்களை உரியவாறு பாதுகாத்தல் என்பன உள்ளிட்ட அனைத்துச் செயன்முறைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெறவுள்ள பேரணியின் ஊடாக செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறை அவசியம் என்பதற்கு அப்பால், தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பில் சுயாதீனமான சர்வதேச குற்றவியல் விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் உண்மை மற்றும் நீதி உறுதிப்படுத்தப்படவேண்டும், நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும், தமிழ் மக்களின் நில உரிமை பாதுகாக்கப்படவேண்டும், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் அரசினால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும், தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் மத உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பன உள்ளடங்கலாக தமிழ் மக்களின் நலன் சார்ந்த ஏனைய விடயங்களும் வலியுறுத்தப்படவுள்ளன.



