தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் நீண்ட நாட்களாக நீர் திறக்கப்படாததன் காரணமாக முரசுமோட்டை பகுதியில் உள்ள கால்நடைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பொறியியலாளருக்கு அவ்வமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கால்நடைகள் நீரின்றி தவித்து வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நீர்ப்பாசனக் கால்வாய்கள் ஊடாக கால்நடைகளுக்கான நீர் திறக்கப்படாவிட்டால், அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக நீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், அறுவடை முடிந்ததும் காலபோக விதைப்பு தொடங்கும் வரையில் வைக்கோலை எரிக்கவோ அல்லது நிலத்தைப் பண்படுத்தவோ வேண்டாம் என விவசாயிகளுக்குப் பலமுறை அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது குறித்து கமநல சேவை நிலையத்திற்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பல காணிகளில் வைக்கோல் எரிக்கப்பட்டதால் தொடரும் ‘எல்-நினோ’ தாக்கத்துடன் சேர்ந்து நிலம் மேலும் வறண்டு போயுள்ளது.
இருக்கும் வைக்கோலையும் தொடர்ந்து எரித்து வந்தால், வரும் நாட்களில் கால்நடைகளுக்கான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு பெரும் நெருக்கடி நிலை உருவாகும். எனவே, வைக்கோல் எரிப்பைத் தடுப்பதற்கும் கால்நடைகளின் உணவைப் பாதுகாப்பதற்கும் உரிய சரியான நடைமுறை மற்றும் பொறிமுறை ஒன்றை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கோரிக்கை மனுவின் பிரதிகள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரின் கவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




