பொது சுகாதாரத் துறையில் இலங்கை அடைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு முக்கிய சாதனைகளைப் பாராட்டி, உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு உயர் உத்தியோகபூர்வ அங்கீகார சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
திமோர் லெஸ்தேயின் டிலி நகரில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய வலயக் குழுவின் 79 ஆவது மாநாட்டின் போது, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இச் சான்றிதழ் கையளிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய அலுவலகப் பொறுப்பதிகாரி வைத்தியர் நிலேஷ் புத்தா அவர்களின் கையொப்பத்துடனான இச் சான்றிதழை, உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் வழங்கி வைத்துள்ளார்.
இலங்கை 2016 ஆம் ஆண்டில் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார அமைப்பினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் மலேரியா மீண்டும் பரவாமல் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி அந்த நிலையினைத் தொடர்ச்சியாகப் பேணி வந்தமைக்காக இப் பாராட்டு வழங்கப்பட்டுள்ளது. மாலைத்தீவுக்குப் பிறகு தென்கிழக்காசிய பிராந்தியத்தில் மலேரியாவை ஒழித்த இரண்டாவது நாடு இலங்கையாகும்.
தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான டெட்டனஸ் நோயை வெற்றிகரமாக ஒழித்து, கடந்த 10 ஆண்டுகளாக அந் நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டமையும் இதில் முதன்மையாகப் பாராட்டப்பட்டுள்ளது.
கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி திட்டங்கள் நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையின் பலமான முதன்மை சுகாதாரப் பராமரிப்பு முறைமை, வலுவான தேசிய அர்ப்பணிப்பு, உயர் தடுப்பூசி திட்டங்கள் மற்றும் திறமையான நோய் கண்காணிப்பு முறைமை ஆகியவையே இந்த நீண்டகால வரலாற்றுச் சாதனைக்குக் காரணம் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.



