இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் – ஐ.நா

சர்வதேச சட்டங்களுக்கு முரணான மிகமோசமான மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலில் எட்டப்படும் முன்னேற்றங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து கண்காணிப்பதுடன் அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய அழுத்தங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவையும், ஏனைய உறுப்புநாடுகளும் பிரயோகிக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (8) ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கையின் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் இடம்பெற்றுவந்த உள்நாட்டு மோதல்கள் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் புதுப்பிக்கப்பட்ட விடயங்களைக் காண்பிக்கின்றன.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், கடந்தகால மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதாக வாக்குறுதி அளித்தது. இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது போன்று சில முக்கிய வழக்குகளில் முன்னேற்றம் எட்டப்பட்டதைத் தவிர, 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட போரின்போது சகல தரப்பினராலும் இழைக்கப்பட்ட சர்வதேச சட்டங்களுக்கு விரோதமான மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை. குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்படல்கள், தொண்டு நிறுவன ஊழியர் படுகொலை, ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் என்பன தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

அதுமாத்திரமன்றி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை நிறுவுவதாகவும், உரிய சட்டக் கட்டமைப்புக்களை ஸ்தாபிப்பதாகவும் அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை. அத்தோடு இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நிறுவப்பட்ட பொறிமுறையை அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேபோன்று பெரும்பாலும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை இலக்குவைத்து இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தடைச் சட்டத்தைத் தொடர்ந்து பிரயோகித்து வருகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச புலனாய்வுப்பிரிவினரின் கண்காணிப்புக்கள் தொடர்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக உரிய சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்களை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். அத்தோடு பரந்துபட்ட பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புக்களை முன்னெடுத்து, அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை நோக்கி நகரவேண்டும். அன்றேல், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வலுவடைந்து, பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கை நலிவடையும்.

மேலும் சர்வதேச சட்டங்களுக்கு முரணான மிகமோசமான மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலில் எட்டப்படும் முன்னேற்றங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய அழுத்தங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவையும், ஏனைய உறுப்புநாடுகளும் தொடர்ச்சியாகப் பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.