நாட்டை வந்தடைந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று செவ்வாய்க்கிழமை (8) பிற்பகல் இந்திய விமானப்படையின் விசேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தார்.

எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி சம்பத் துய்யகொந்த ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினரையும் அவர் சந்திக்கவுள்ளார்

இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, இருதரப்பு பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளன.

மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது எட்டப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான உடன்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 1988 ஆம் ஆண்டு கே.சி. பந்த் இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர், சுமார் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.