இலங்கையின் நீர், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களில் சீன தொழில்நுட்பம், பொறியியல் நிபுணத்துவம் மற்றும் முதலீட்டு வளங்களை இணைப்பதற்கான மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ABC Trade & Investments நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அமல்ராஜா ஜயசீலன் மற்றும் ACEF இன் Belt & Road Eco-Industry Cooperation சூழல்–தொழில்துறை இடையிலான ஒத்துழைப்பு பணிக்குழுவின் பொதுச்செயலாளர் ஷி ஜியாங் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
கொழும்பு Nondescripts Cricket Club (NCC) மைதானத்தில் நடைபெற்ற சீனா–இலங்கை சுற்றுச்சூழல் மற்றும் வலுசக்தி பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான கூட்டத்தின்போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ACEF தனது சீன சுற்றுச்சூழல், நீர் பொறியியல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் EPC முதலீட்டு வலையமைப்பை வழங்கும் நிலையில், ABC Trade & Investments நிறுவனம் தனது நீர் விஞ்ஞானப் பிரிவு ஊடாக ஆலோசனை, வடிவமைப்பு, உபகரண விநியோகம், நிறுவல், பரிசோதனை மற்றும் நீண்டகால இயக்கம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்கவுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் தனித்தனி தொழில்நுட்ப மற்றும் வர்த்தகத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு, தனித்தனியாக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளன. இதன் மூலம் இலங்கையின் நீண்டகால சுற்றுச்சூழல் மற்றும் சிவில் உட்கட்டமைப்பு தேவைகளுக்கு நடைமுறை மற்றும் அளவிடக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதே இரு தரப்பினரின் நோக்கமாகும்.



