இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தாய்லாந்திற்குப் பயணம் செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த வீசா இல்லா நுழைவுச் சலுகை செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படுவதாக கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தாய்லாந்து தூதரகம் நேரடியாகவோ அல்லது காகிதப் படிவங்கள் மூலமாகவோ வீசா விண்ணப்பங்களை ஏற்காது. விண்ணப்பங்கள் அனைத்தும் தாய்லாந்தின் உத்தியோகபூர்வ e-Visa தளம் (thaievisa.go.th) மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் சுற்றுலா வீசா (Tourist Visa) விண்ணப்பங்கள் அனைத்து ஆவணங்களும் சரியாகச் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 3 முதல் 7 வேலை நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும்.
குடியமர்வு அல்லாத விசாக்கள் மற்றும் டிடிவி (DTV – Destination Thailand Visa) ஆகியவற்றிற்குக் கூடுதல் நாட்கள் தேவைப்படலாம்.
செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் பழைய விசா விலக்கு முறையின் கீழ் தாய்லாந்திற்குள் நுழையும் இலங்கை பயணிகள், அவர்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காலம் முடியும் வரை அங்கிருக்க அனுமதிக்கப்படுவர்.
தேவைப்படும் பட்சத்தில் மேலதிக ஆவணங்களைக் கோரவும், விண்ணப்பதாரர்களை நேர்காணலுக்கு அழைக்கவும் தூதரகத்திற்கு உரிமை உண்டு.
இலங்கையில் அல்லது மாலைதீவில் செல்லுபடியாகும் வேலை அனுமதிப் பத்திரம்/வசிப்பிட அனுமதி வைத்துள்ள வெளிநாட்டவர்களுக்கும் மேலதிக செயலாக்க நேரம் தேவைப்படலாம். பயணிகள் தவறான தகவல்களைத் தவிர்த்து, தாய்லாந்து தூதரகத்தின் உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளங்களை மட்டுமே புதிய தகவல்களுக்குப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



