நீதிக்கான நீண்ட பயணமும் நீர்த்துப்போகும் யதார்த்தங்களும் : விதுரன்

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக் கப்பட்டோருக்கான தினமான கடந்த ஆகஸ்ட் 30 அன்று, ‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது.
இந்த சர்வதேச மாநாடானது, ஈழத்தமிழர்களின் தசாப்த கால போராட்ட வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாகப் பார்க்கப்பட்டாலும், அதன் பின்னணியில் உள்ள அரசியல், சமூக மற்றும் மூலோபாய ரீதியான பலவீனங்கள் கூர்மையான அவதானத்துக்கு உள்ளாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரசன்னத்தையும் அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வு, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் சர்வதேசக் குரலாக வெளிப்பட்டபோதிலும், உள்ளூர் அரசியல் தலைமைகளின் சுயநலப் போக்குகளினாலும், போராட்ட வடிவம் இரு பிரிவுகளாகப் பிளவுபட்டிருந்தமையினாலும் அதன் உண்மையான அரசியல் தாக்கத்தை முழுமையாக அடையத் தவறிவிட்டது.
இந்நிகழ்வின் மிக முக்கியமான நேர்மறையான அம்சம், இதுவரை மாவட்ட ரீதியாகச் சிதறிக்கிடந்த வடக்கு-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து, சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு சென்றமையாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணா மலாக்கப்படல்கள் தொடர்பான பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேரஸ் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப் பாளர் ஸ்மிருதி சிங் ஆகியோரின் நேரடிப் பங்கேற்பு, பாதிக் கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு சர்வதேச மட்டத்தில் சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்துள்ளது.
குறிப்பாக, ‘உண்மையைத் தெரிந்து கொள்ளாம லேயே பலர் மரணித்துவிட்டனர்; இனிமேல் அந்த உண் மையைத் தெரிந்து கொள்ளாமல் எவரும் மரணிக் கக் கூடாது’ என்று அனா லொரெனா விடுத்த எச்சரிக்கை யானது, இலங்கை அரசால் காலங்கடத்தப்படும் நீதிச் செயன்முறைக்கு விழுந்த பலத்த அடியாகும்.
அரச அதிகாரிகளிடம் போதுமான ஆதாரங்கள் இருந்தும் குற்றங்களை மறுதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், செம்மணி உள்ளிட்ட மனிதப் புதை குழி அகழ்வுகளுக்கு சர்வதேச ஆதரவுடனான முறை யான விசாரணைகள் அவசியம் என்றும் அவர்கள் வலி யுறுத்தியமை, இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறையான ‘காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்’ முற்றிலும் பயனற்றது என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது.
இருப்பினும், இந்த மாநாடு பாதிக்கப்பட்ட மக்களின் புனிதமான நீதிக்கான மேடையாக அமைவதற்குப் பதிலாக, தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசன்ன பிரசார மேடையாக மாற்றப்பட்டமை மிகவும் கவலைக்குரிய கட்ட மைப்புப் பலவீனமாகும்.
தசாப்த காலமாக வீதியில் நின்று போராடும் தாய்மாரின் வலியை மூலதனமாகக் கொண்டு, தேர்தல் அரசியல் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு மாநாட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. சிவஞானம் சிறிதரன், துரைராசா ரவிகரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர் களுக்கும் ஏனைய கட்சிப் பிரமுகர்களுக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான குரலையும் சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பையும் ஓரங்கட்டியது.
அதேவேளை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் குறித்த மாநாடு தொடர்பில் ‘அழைப்பிதழ் கிடைக்க வேண்டும் இல்லாது விட்டால் பங்கேற்க முடியாது’ என்ற தொனிப்பில் விடுத்திருந்த உத்தியோகபூர்வமான அறிவிப்பு, தமிழ் தேசியப் பரப்பில் அது வரலாற்று ரீதியாக வகித்து வந்த ‘தமிழர்களின் தாய்க்கட்சி’ என்ற தகைமையையும் தன்னாதிக்க உரிமையையும் முற்றிலும் இழந்துவிட்டதை வெளிப்படையாகக் காட்டுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களின் சர்வதேச நீதிக்கான கோரிக் கையை நேரடியாகவும் வீரியமாகவும் எடுத்துரைக் கத் தவறி, தென்னிலங்கை ஆட்சியாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப நெகிழ்வுப்போக்கைக் கடைப் பிடிக்கும் தமிழரசுக் கட்சியின் அணுகுமுறை, இம்மாநாட்டின் மூலமாக அம்பலப்பட்டுள்ளது.
மேலும், இவ்வளவு முக்கியமானதொரு சர்வதேச தினத்தில், பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்படாமல் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் என்று இரு பிரிவுகளாக நடத்தப்பட்டமை போராட்டத்தின் ஒட்டுமொத்தப் பலத்தையும் வீரியத்தையும் கணிசமாகக் குறைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் சர்வதேசப் பிரதிநிதிகளுடன் மாநாடு நடைபெற்ற அதேவேளையில், கிளிநொச்சியில் லீலாதேவி ஆனந்தநடராஜாவின் ஒருங்கிணைப்பில் மற் றொரு கவனயீர்ப்புப் போராட்டமும் நூல் வெளியீடும் தனி யாக நடத்தப்பட்டன.
ஒரே கோரிக்கையை முன்னிறுத்திப் போராடும் ஒரு அமைப்பிற்குள் ஏற்பட்ட இத்தகைய பிளவு, பாதிக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைந்த குரலை சர்வதேச சமூகத்தின் முன் பலவீனப்படுத்திக் காண்பிப்பதாகவே அமைந்தது. ஒரே நாளில் இரு வேறு இடங்களில் உணர்ச்சிப்பூர்வமாக நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்வுகள், அமைப்பிற்குள் இருக்கும் தலைமைத்துவப் போட்டியையும், திட்டமிடலின்மையையும் வெளிச்சம்போட்டுக் காட்டியதுடன், எதிர்த்தரப்பினருக்கு இப் போராட்டத்தைச் சுலபமாக சிதைப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதேவேளை, கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த ஊடக வியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் பங்கேற்றிருந்தமை கூர்ந்து கவனிக்கத்தக்கது.
தென்னிலங்கை மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்து வரும் இவர்கள் தமிழர்களின் போராட்டத்தில் பங்கெடுத்தது ஒருவகையில் நல்லிணக்கத்திற்கான அடையாளமாகக் கருதப்பட்டாலும், இது அரசியல் ரீதியாக ஒரு நுட்பமான சமநிலையை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
அதாவது, வலிந்து காணாமலாக்கப்படுதல் என் பது தமிழினத்திற்கு எதிராக அரசு நடத்திய திட்டமிட்ட இனப்படுகொலையின் ஒரு அங்கம் என்பதை நீர்த்துப்போகச் செய்து, அது ‘ஜே.வி.பி. கிளர்ச்சிக் காலங்களிலும் தெற்கில் நடந்த பொதுவான மனித உரிமை மீறல்’ என்ற தளத்திற்குள் கொண்டுவந்து சமநிலைப்படுத்தும் மேற்குலக புவிசார் அரசியல் நோக்கத்தை முழுமையாக பிரதிபலிக்கிறது.
தென்னிலங்கையில் நடந்த காணாமலாக்கப் படல்களும் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கட்டமைக் கப்பட்ட பேரழிவும் ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்க்கப்பட முடியாது என்ற வரலாற்று யதார்த்தத்தை இத்தகைய பங்கேற்புகள் மழுங்கடிக்கச் செய்கின்றன.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், யாழ்ப்பாணத் தில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாடு, காணாமலாக்கப் பட்டவர்களின் பாவனைப் பொருட்கள், புகைப்படங்கள் அடங்கிய சாட்சியக் கண்காட்சி மற்றும் நூல்கள் வெளியீடு என்று வரலாற்றுப் பதிவுகளின் வழியே சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்தாலும், மாநாட்டிற்குப் பிந்தைய முறையான செயற்றிட்டம் எதுவும் முன்வைக்கப்படாமை பெருங்கு றையாகும்.
பாதிக்கப்பட்ட தாய்மார்கள் வயது முதிர்வாலும் நோயினாலும் காலப்போக்கில் மரணித்து வரும் சூழலில், அடுத்த பத்தாண்டுகளில் இப்போராட்டம் வெறும் அடை யாளப் போராட்டமாக மாறிவிடும் அபாயம் நிலவுகிறது.
ஆகவே, அரசியல்வாதிகளின் விளம்பர மேடை யாக மாறுவதைத் தவிர்த்து, ‘சாட்சியங்களை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தல், சர்வதேச சட்ட நிபுணர்களு டன் பணிக்குழு அமைத்தல், மற்றும் ஐ.நா. மனித உரிமை அமைப்புகளுக்குத் தொடர்ச்சியான வழக்குகளைக் கையளித்தல்’ போன்ற நடைமுறைச் சாத்தியமான செயல் திட்டங்களை முன்னெடுத்தால் மட்டுமே இம்மாநாட்டின் மூலம் விதைக்கப்பட்ட நீதிக்கான விதை விருட்சமாக வளர முடியும்.
அங்ஙனம் இல்லாதபட்சத்தில், இதுவும் கால ஓட்டத் தில் கடந்து போகும் மற்றொரு வருடாந்த நினைவேந்தல் நிகழ்வாகவே எஞ்சிநிற்கும் என்பதை எந்தவொரு பங்குதாரர்களும் மறுதலித்துச் செயற்பட முடியாது.