நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 47.3% ஆகக் குறைவு!

இலங்கையில் நிலவும் வறட்சியான வானிலைக்கு மத்தியில், நாடு முழுவதிலும் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்ச்சேகரிப்பு திறன் தற்போது 47.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது சுமார் 34.4 சதவீதமாக உள்ளதுடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சுமார் 20 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், யால சிறுபோகச் செய்கை தற்போது இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளதால், எஞ்சியுள்ள நீர் இருப்பு இந்தப் பருவத்தின் மீதிப் பகுதிக்குப் போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், அடுத்த மழை பெய்யும் வரை இந்நீர்த்தேக்கங்களை நம்பியிருக்கும் பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்த நீர் இருப்பு போதுமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் ஆவியாதல் அதிகரித்துள்ளதால், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், பருவகாலத்தின் தொடக்கத்தில் கிடைக்கும் நீரின் அளவு மற்றும் விவசாயக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையில், மகா போகச் செய்கையை முடிந்தவரை விரைவில் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் ஹேரத் தெரிவித்துள்ளார்.