22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தோற்கடிப்போம்: சஜித்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சர்வாதிகார ஆட்சியில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தைத் தோற்கடித்து, நாட்டின் நீதித்துறை மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் முன்னிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை (3) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சர்வாதிகார ஆட்சியில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதற்காகவே இன்றைய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றோம். நீதித்துறை மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பை பாதுகாப்பதற்காக இன்று நாம் வீதிக்கு இறங்கியுள்ளோம். சர்வாதிகார அநுர அரசாங்கம் இந்நாட்டில் ஜனநாயகத்தை சீரழிப்பதற்காகவே செயற்படுகிறது.

மக்களின் ஜனநாயக உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, சட்டத்தை நிலைநாட்டும் நடைமுறை என்பன சீரழிக்கப்படுகின்றன. நாட்டிலுள்ள ஒரேயொரு மாற்று சக்தியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த துஷ்ட 22ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதற்கு முழு முயற்சியெடுக்கும். அதற்காக ஜனநாயக ரீதியில் எடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

இன்று நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்து, வறுமை நிலை அதிகரித்து தொழில் இன்மையும் அதிகரித்துள்ளது. தொழழிற்சாலைகள் பல மூடப்படுகின்றன. ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டு அவர்கள் வெளிநாடுகளில் முதலீடுகளை மேற்கொள்கின்றனர். மக்களின் இவ்வாறான பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் எந்தவொரு தீர்வும் இல்லை.

அரசாங்கத்தின் ஒரேயொரு இலக்கு தனிகட்சி ஆட்சி முறைமை இந்நாட்டில் நிலைநாட்டுவது மாத்திரமேயாகும். ஆனால் அரசாங்கத்தின் அந்த முயற்சியையும் நாம் வெற்றியடைவிப் போவதில்லை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால் அவர்கள் வெற்றி பெறலாம். ஆனால் மக்கள் அரசாங்கத்தை தோற்கடிப்பர் என்றார்.