நீதிமன்றம் தீர்ப்பளிக்குமாயின் சர்வசன வாக்கெடுப்புக்கு தயார் : அரசாங்கம் தெரிவிப்பு

இலங்கை அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த சட்டமூலத்திற்கு சர்வசன வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அரசாங்கம் சர்வசன வாக்கெடுப்பை நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

22 ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

சர்வசன வாக்கெடுப்பு தேவைப்படும் வகையிலான எந்தவொரு மாற்றத்தையும் முன்மொழியப்பட்ட திருத்தத்தில் அரசாங்கம் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“சர்வசன வாக்கெடுப்பு ஒன்று தேவைப்படாது என்றே நாம் நம்புகிறோம். இருப்பினும், அது தேவை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், நாம் அதனை நடத்துவோம்.

இதற்கான முடிவு மூன்று வாரங்களுக்குள் தெரியவரும்” என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.