தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அரசின் அழுத்தம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரசினுடைய அதிகார பின்னணியில் விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்களை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் இப்படியான விடயங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினுடைய கோர முகத்தினை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஏமாந்த தமிழ் மக்களுக்கும் வெளிப்படுத்துகின்றது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்ற ஊடகவியலாளர்களுடைய உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்கும் தாங்கள் எப்போதும் அரணாக நிற்போம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர் தாயகத்தில் ஆளும் தரப்பினருடைய அதிகார துஷ்பிரயோகங்கள் வரம்பு மீறி செல்கின்றன.

அது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டியது தங்களது கடமையாகும் என்றும் தமிழர் தாயகப் பகுதிகளில் ஊடகவியலாளர் ஒருவர் அரச ஆதரவோடு அச்சுறுத்தப்பட்டிருக்கிறார் என்றும் சுகாஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழர் தாயகப் பகுதிகளில் பல ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பலர் காணாமலாக்கப்பட்டு இருக்கிறார்கள். பலர் அச்சுறுத்தப்பட்டு நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். ஒரு சிலர் இன்றுவரை அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டில் ஊடகப் பணியாற்றி வருகின்றார்கள்.

இந்தச் சூழலில் புதிய ஒரு ஆட்சி மலர்ந்திருக்கின்றது தாங்கள் மக்களுடைய ஜனநாயகத்தை உறுதிப்படுத்துகின்றோம் என சர்வதேசத்துக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் போலியான முகத்தை காட்டுகின்ற தற்போதைய அரசாங்கத்தினுடைய ஒரு ஊடகவியலாளர் அரசினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்கவில்லை என அவருக்கு எதிராக பல்வேறுபட்ட அழுத்தங்களும் அச்சுறுத்தல்களையும் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .

இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்ந்த தமிழ் தேசிய பேரவையாகவும் மனித உரிமைகளை மதிக்கின்ற ஒரு சட்டத்தரணியாகவும் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண். அந்த நான்காவது தூணை சுதந்திரமாக, சுயாதீனமாக செயற்பட விட வேண்டும். நடுநிலையாக செயல்படுகின்ற ஊடகவியலாளர்களை இலக்கு வைப்பது என்பது தமிழ் சமூகத்துக்கே பாதிப்பை தரக்கூடிய விடயமாகும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் விமர்சித்துள்ளார்.