மனித உரிமை குற்றச்சாட்டுகளுக்கு நீதி வழங்குவதில் தாமதம் நிலவுவதாக சர்வதேச அமைப்பொன்று குற்றச்சாட்டு

இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியான தன்மை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் மெத்தனப் போக்கில் காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) அமைப்பு தனது புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சில முக்கிய வழக்குகள் தொடர்பில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர், சித்திரவதைகள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பான பல முக்கிய வழக்குகள் தொடர்ந்தும் ஸ்தம்பித்துள்ளதாக அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பல மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாள காண்பதற்கோ அல்லது பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித உரிமைப் போராளிகளும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கும் பயமுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை சர்வதேச சமூகத்தின் பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு அரசாங்கம் முறையாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், தசாப்த காலமாக நிலவும் தண்டனையிலிருந்து விலகும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உண்மையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச சமூகத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதியை வழங்க உடனடியாகச் செயற்படுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு அந்த அமைப்பு அழுத்தம் கொடுத்துள்ளது.