நுரைச்சோலை மின்நிலைய விவகாரம்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையம் மூடப்படக் கூடும் என வெளியாகும் தகவல்கள் குறித்து இலங்கை மின்சார சபையோ அல்லது இலங்கை நிலக்கரி நிறுவனமோ அரசாங்கத்திற்கு எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களையும் வழங்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (1) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் 4 ஆம் திகதியுடன் நுரைச்சோலை மின்நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்படவுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையும் அரசாங்கத்திற்குப் பெறப்படவில்லை. மின் உற்பத்தி அல்லது நிலக்கரி விநியோகத்தில் ஏதேனும் சிக்கல்கள் எழும் பட்சத்தில், அது குறித்து முன்னதாகவே ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் அரசாங்கம் வெளிப்படையாக அறியத்தரும்.

 

மேலும், நிலக்கரி கொள்முதல் மற்றும் இறக்குமதி நடைமுறைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கருதுபவர்கள், அது தொடர்பான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் இவ்வாறான ஆணைக்குழுக்கள் முன் தோன்றி ஆதாரங்களைச் சமர்ப்பித்திருக்க வேண்டுமே தவிர, அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாகக் கருத்துகளைக் கூறி வருவதை விடுக்க வேண்டும்.

மின்சார சபை மூலம் இது தொடர்பில் ஏதேனும் உத்தியோகபூர்வ தகவல்கள் பெறப்பட்டால், உடனடியாக அது குறித்துப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.