பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கோர்டன் பிறவுண் “ சுற்றியுள்ள உலகில் பிரிவினை மற்றும் அபாயகரமான அரசியலை மக்கள் நிராகரிக்கின்றனர். நாங்கள் இது முடியுமெனக் கட்டாயம் கட்டியெழுப்ப வேண்டும். (Around the world People are rejecting divisive and dangerous politics. We can – and must – build on that. Gordon Brown)” என உலகிற்கு அழைப்பு விடுத்துள்ளார். “மனித உரிமைகளிலும் காலநிலையைப் பேணுவதிலும் செயற்கை நுண்ணறிவை இவற்றைப் பேணுவதில் பயன்படுத்துவதிலும் பெருமளவிலான உலகப்பொதுமக்கள் அனைத்துலக ஓத்துழைப்பை வேண்டி நிற்பதை இத்தகைய மனநிலை உள்ள நாடுகள் ஒன்றாக இணைந்து வழங்கிட வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ள லேபர் கட்சியின் முன்னாள் பிரித்தானியப் பிரதமரும் பொருளியல் சிந்தனையாளரும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக கல்விக்கான சிறப்புத் தூதுவருமான கோர்டன் பிறவுண் அழைப்பு விடுத்துள்ளார். இத்தகைய மனநிலையுள்ள நாடுகள் மட்டுமல்ல உலகில் உள்ள மக்களும் இவ்விடயத்தில் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைவதற்கான தம்மாலான முயற்சிகளை அரசற்ற தேசஇனமாகவுள்ள ஈழத்தமிழினம் போன்ற உலகின் தேசஇனங்களும் தமக்குள் தேசிய ஒருமைப்பாடடை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஒன்றிணைய வேண்டும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் உள்ள உலக டூம்ஸ்டே கடிகாரம் 89 நொடிகளே உலக அழிவுக்கு உள்ளதென எதிர்வு கூறியுள்ள நிலையிவ் கோர்டன் பிறவுணின் இந்த அழைப்பு அனைத்துலக முக்கித்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இந்த டூம்ஸ்டே கடிகாரம் எமது நாளாந்த கடிகாரம் போன்ற அளவீடு உடையது அல்ல. இதன் ஒவ்வொரு டிக் சத்தமும் உலகின் அழிவுக்கான நிலைமைகள் உருவாகும் பொழுதே ஏற்படும். அணுசக்தியைக் கண்டறிந்த அயன்ஸ்டினாலும் அவர்கால அறிவியலாளர்களாலும் அணுவாயுதத்தினாலேயோ அல்லது காலநிலை சீர்கேட்டாலோ உலகப் பேரழிவு ஏற்படக்கூடிய நிலைகள் வருகையில் எச்சரிப்பதற்கான கடிகாரம் போன்ற ஒரு எச்சரிப்புக் கருவி. இதில் நொடி என்பது அந்தக் கடிகாரத்தின் முட்கள் நள்ளிரவை நெருங்குவதற்கான வேகத்தை அறிவிப்பதன் மூலம் உலகப்பேரழிவை தடுப்பதற்கான முற்பாதுகாப்பை ஏற்படுத்தும் ஒரு அறிவியல் குறியீட்டு முயற்சியாக இருபத்தோராம் நூற்றாண்டின் விஞ்ஞான மனிதன் எனப் புகழாரம் பெற்ற அயன்ஸ்டினால் தொடங்கப்பெற்று இன்று வரை பல நோபல் பரிசுபெற்ற சமுகத்தவர் அறிவியல் சமுகத்தவர் இணைப்பால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 1991 இல் அமெரிக்க ரஸ்ய பனிப்போர் முடிந்து உலக அழிவு தடுக்கப்படுகிறது என்ற நிலை தோன்றிய பொழுது இந்தக் கடிகாரம் 17 நிமிடங்கள் பின்னோக்கி நகர்த்தப்பட்டது. இப்போது 89 நொடிகளே உலக அழிவுக்கு உள்ளதென்கிற அளவுக்கு அபாயகரமான நிலையில் உலகு உள்ளதென இக்கடிகாரம் எச்சரிப்பதால் உடனடியாக இதனைத் தடுப்பதற்கான முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபட வேண்டுமென்பதே இதன் பொருள் என்பதனை இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது.
கோர்டன் பிறவுண் அவர்கள் 1960களில் கியூபாவில் ரஸ்யா அமெரிக்காவை நோக்கி ஏவுகணை தளம் அமைத்ததை விட இப்பொழுது மோசமான நிலை தோன்றியுள்ளது என்பதை கூறிவிட்டே இந்த டூம்ஸ்டே கடிகார எச்சரிப்பையும் எடுத்துரைத்துள்ளார். ட்ரம்பின் ஈரானுடன் பொருளாதார தொடர்புடைய நாடுகளும் அமெரிக்காவின் இலக்காக்கப்படுமென்கின்ற எச்சரிப்பு சீனாவுக்கான மறைமுக எச்சரிப்பா என்கிற கேள்வி எழுகிறது. அதே வேளை ட்ரம்ப் ஈரானின் மனித நாகரிகம் ஒரு இரவிலேயே அழிக்கப்படுமென எச்சரித்தமை வெளிப்படையான ஈரானிய மக்கள் மேலான இனஅழிப்பு அறிவிப்பாகவே கோர்டன் பிறவுண் அவர்களால் அவரது கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டு கூடவே அமெரிக்காவுடன் நீண்டநாள் கூட்டாண்மை கொண்ட ஒமானை அது ஈரானுடன் ஹோர்மூஸ் நீரிணை போக்குவரத்துக் குறித்து ஒப்பந்தம் செய்தால் தாக்குவேன் என்னும் ட்ரம்ப் அவர்களின் எச்சரிப்பை அமெரிக்காவுக்கு உலகளாவிய பெருமை சேர்த்த தூண்களாக விளங்கிய மனித உரிமைகளைப் பேணல், பன்நிலை ஒப்பந்த ஒத்துழைப்பு மனிதாய உதவிகள் சட்டத்தின் ஆட்சி என்பவற்றையே சிதைக்கும் செயலாக அமைந்து விட்டதெனவும் கோர்டன் பிறவுண் விபரித்துள்ளார். இது மூன்றாம் உலகப் போருக்கான தூண்டலாக மாறிவிடக் கூடிய அபாயமாக வளர்வதனையே டூம்ஸ்டே கடிகாரம் 89 நொடிகளே உலக அழிவுக்கு உண்டென்ற எச்சரிப்பும் உறுதி செய்து அதிலிருந்து மீளுவதற்கான உடனடி விழிப்புணர்வுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.
அமெரிக்கா மட்டுமல்ல ரஸ்யா சீனா ஆகிய உலகின் வல்லாண்மைகளும் உலகப் பேரழிவுக்கான ஊக்கப்படுத்தல்களையே உலக அரசியலாக்கிக் கொண்டிருக்கின்றன. ரஸ்ய அரசத்தலைவர் புடீனின் யப்பானுக்குரியதாக 1947 களில் முடிவான ரஸ்ய எல்லைத் தீவுக்குச் சென்றமை யப்பானை நோக்கிய ரஸ்ய அணுவாயுத நிலையெடுப்பா என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. உக்ரேனுக்கு சக்திபடைத்த ஏவுகணைகளை பிரித்தானியாவும் பிரான்சும் கொடுப்பது நெருப்புடன் விளையாடும் விளையாட்டு என ரஸ்யா எச்சரித்தமை ஐரோப்பிய நாடுகளுடன் பிரித்தானியா மேலும் நெருக்கமாக பாதுகாப்பில் இணைய வேண்டிய சூழ்நிலையை மேலும் பலப்படுத்தியுள்ளது. சீனாவின் அரசத்தலைவர் தாய்வான் தங்களுடைய நிலப்பரப்பாக மீள இணைப்பது உறுதியானதென அறிவித்துள்ளது மூன்றாம் உலகப் போருக்கானசூழலை மேலும் அதிகரித்துள்ளது. இந்த உலக மாற்றங்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் முன்னைய ஒட்டமன் பேரரசு அனுபவமுள்ள துருக்கியும் பண பலம் படைத்த சவூதி அரேபியாவும் அணுக்குண்டை வைத்திருக்கும் பாக்கிஸ்தானும் இணைந்த பாதுகாப்புக் கூட்டமைப்பு என்பது நேட்டோவுக்குச் சமாந்திரமான இஸ்லாமியநாடுகளின் கூட்டமைப்பா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதில் பங்களாதேஸ் இணைய முயற்சிப்பது இந்தியாவுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாகுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த இக்கட்டான உலக அரசியல் பொருளாதார போர் சூழலில் யப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, எமிரேட்ஸ், எகிப்து, போலந்து, யேர்மனி போன்ற நாடுகள் தங்கள் பாதுகாப்புக்கான நவீன ஆயுதங்களை வளப்படுத்திப் பலப்படுத்துவதுடன் தங்களுக்கான அணுவாயுதங்களை தாங்களும் ஏதோவிதமாக தங்கள் நாடுகளில் வைத்திருக்க வேண்டுமென்கிற நடைமுறை எதார்த்தத்தை உருவாக்கியுள்ளது. இவ்வாறான உலகின் பாதுகாப்புக்கான பதற்றமான நடைமுறை நிலைமைகளே டூம்ஸ் கடிகாரத்தை உலக அழிவுக்கான விரைவுக்காலமாக 89 நொடிகளை அறிவிக்க வைத்துள்ளது. இந்த சமகாலத்தன்மையை விளக்கும் வகையிலேயே அனைத்துலக சட்டங்களுக்கு கட்டுப்பாடான முறையில் செயற்படாது அதிகார வலுக்கொண்டு செயற்படுவனவாக வல்லரசுக்கள் மாறிவிட்டன என்பதனை கோர்டன் பிறவுண் தான் அறக்கட்டளையாளராக இருக்கும் போர்ட் பவுண்டேசனின் 34 நாடுகளில் 36000 மக்களிடை நடத்திய கருத்துக்கணிப்பில் 55வீதமானவர்கள் பிரிவினைகளையும் அபாயகரமான அரசியல்களையும் நிராகரித்துள்ள நிலையில் அவர்களின் முடிவை நடைமுறைப்படுத்தியே ஆவதற்காக முடியுமென்ற உறுதியுடன் செயற்படல் வேண்டும் என கோர்டன் பிறவுண் அறிவித்துள்ளதுடன் பிரித்தானியாவின் புதிய பிரதமர் சட்டத்தின் ஆட்சி மனித உரிமை காலநிலை சீர்கேட்டிலிருந்து விடுபடுதல் செயற்கை நுண்ணறிவினை பாதுகாத்தல் என்பனவற்றில் உறுதியுடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
கனடாவின் பிரதமர் மற்றும் பின்லாந்தின் பிரதமர் முன்னிலைப்படுத்தும் அரசியல் பொருளாதார அனைத்துலக வர்த்தக மற்றும் அனைத்துலகப் பாதுகாப்பு இணைப்பில் அவுஸ்திரேலியா,இத்தாலி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ், பிரேசில், தென் கொரியா போன்ற நாடுகளுடன் இந்த முயற்சியில் இறங்க வேண்டுமென வழிகாட்டியுமுள்ளார். உலக நடைமுறை அரசியல் இவ்வாறு இருக்கும் இந்நிலையில் மன்னார் வங்காள விரிகுடாப்பகுதியை எண்ணைய் அகழ்வு ஆய்வுக்கென சிறிலங்கா அனைத்துலக கம்பெனிகளின் டென்டரை அறிவித்துள்ளது. வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடிக்கிற கதையாக ஈழத்தமிழர்களின் தாயகப் பகுதிகளை சிறிலங்காவுக்கான பணவரவுப் பகுதிகளாக ஈழத்தமிழர்களின் விருப்புப் பெறப்படாது செய்யப்படும் செயலாக மட்டுமல்லாது இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்காசியாவின் அரசியல் பொருளாதார அமைதி பிரச்சினையாகவும் பரிணாமமடையும் தன்மை தோன்றியுள்ளது. அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாளாந்த அரசியல் வாழ்விலும் சிறிலங்காவின் நீதி அமைச்சரும் மீன்வளத்துறை அமைச்சரும் இணைந்து யாழ்ப்பாண செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளன்று புள்ளிவிபரங்களால் தாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிக்கானதும் அவர்களின் கிட்டிய குடும்பங்களுக்கானதுமான புனர்வாழ்வுக்கானதுமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக உலகிற்கு றீல் காட்டிக் கொண்டிருந்த நேரத்தில் தங்களின் யாழ்ப்பாண செயலக வாயிலில் பாதிப்புற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக தாய்மார் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சனநாயகப் பங்களிப்பை படையினரைக் கொண்டு அவர்களைத் தூக்கி வீசிய காட்சியை சிறிலங்காவின் நீதி அமைச்சர் கையலைபேசியில் காட்சியாகக் கண்டு களித்ததை ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தியதால் ஆத்திரமடைந்த மீன்வளத்துறை அமைச்சர் ஊடகவியலாளரை திட்டியதுமான செயற்பாடு தேசிய மக்கள் சக்தி அரசின் ஈழத்தமிழர் குறித்த நிலைப்பாட்டை உலகிற்கு தெளிவாக்கியுள்ளது.
இந்த நிலையில் ஈழத்தமிழர்கள் இனமாக ஒருமைப்பாட்டுடன் சனநாயக போராட்டங்களில் இணைய வேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன் யாழ்ப்பாணத்தில் செயலகத்து சிறிலங்கா அமைச்சர்கள் செயற்பாடு குறித்து விடுத்த அறிக்கையில் அழைப்பு விடுத்த பொழுது அந்தத் தாயமார்கள் தங்கள் பிள்ளைகளுக்காக மட்டுமல்ல தாயகத்திலும் உலகிலும் வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழினப் பிள்ளையினதும் பாதுகாப்புக்காக தன்மான வாழ்வுக்காக போராடுகிறார்கள் என்ற உண்மையை ஈழத்தமிழர்களின் உள்ளங்களில் பதித்துள்ளார். இதனை குறிப்பாகப் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் மனதிருத்தி கோர்டன் பிறவுண் தெளிவுபடுத்தியுள்ள “அதிகாரப்பட்ட இன்றைய உலகில் இறைமை பேண இனமாக சனநாயக போராட்டங்களில் இணைய வேண்டும்” என இலக்கு மேல் அழைப்பு செய்ய விரும்புகிறது. ஏனெனில் ஈழத்தமிழர்களின் இறைமையை உலகம் ஏற்காதவரை ஈழத்தமிழர்களுக்கான நீதி நடைமுறைச்சாத்திமற்றதாகவே தொடரும் என்பதையே யாழ்ப்பாண செயலகத்தில் பாதிக்கப்பட்ட தாயமாரின் சனநாயக உரிமை மறுக்கப்பட்டமை உலகுக்கு தெளிவாக்கியிருக்கிறது. அனைத்துலகத் தலையீட்டாலேயே நீதி கிடைக்குமென்பதை உறுதிப்படுத்தும் அழைப்பாக ஆகஸ்ட் 30ம்நாள் அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஐ.நா.வின் உலகநாளையொட்டி யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டோரால் முதன்முறையாக நடாத்தப்பெற்ற அனைத்துலக மாநாட்டில் உரையாற்றிய மன்னார் கத்தோலிக்க ஆயர் பேரருள் ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் “இந்நாளை கொடூரமனிதர்கள் நாளாக முன்னெடுக்க வேண்டுமெனவும் அத்தகைய கொடூரமனிதர்களாலேயே எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டனர் எனவும் நீதிக்கான செயன்முறையின் பொறுப்பாளிகள் நியாயமானவர்களாக இருந்தால் நீதிக்கான பயணம் மிகக்குறுகியதாகும் எனவும் அத்தகைய நியாயமானவர்களை இதற்குப் பொறுப்பாக நியமிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக்கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
ஆசிரியர்

இசட் அல்பா பரம்பரையினரின் கையிலேயே நாடுகளின் இறைமையுள்ளது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 405
Ilakku Weekly ePaper 406 | இலக்கு-இதழ்-406 | திங்கள், 31 ஆகஸ்ட், 2026



