இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் உள்ளடங்கலாக சகல சமூகங்களும் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பும் வகையில் சம உரிமையுடனும், சம வாய்ப்புக்களுடனும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வெர்த் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சாணக்கியனிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சாணக்கியனுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வெர்த்துக்கும் இடையில் இவ்வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள், கிழக்கு மாகாண மக்களின் சமகாலத் தேவைகள், நாட்டின் அரசியல் நிலைவரம் மற்றும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியம் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதுமாத்திரமன்றி யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இதுவரை முறையானதும், நிலையானதுமான தீர்வு வழங்கப்படவில்லை என்றும் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள், விவசாயம் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள், காணிப்பிரச்சினை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதார நிலைவரம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியம் என்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சாணக்கியன் எடுத்துரைத்தார்.
அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதிகோரி நீண்டகாலமாகப் போராடிவரும் குடும்பங்கள் பற்றியும், அவர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்திய சாணக்கியன், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் நியாயமான அதிகாரப்பகிர்வு தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
மேலும் கிழக்கு மாகாண அபிவிருத்தி, அங்கு வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் சமமான பங்கேற்பு, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, விசாயமம், மீன்பிடி மற்றும் உள்ளுர் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் என்பன பற்றியும் இச்சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.



