முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பினையும், சிறுவர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது.
அத்துடன், “எதிர்கால தலைவர்களைக் கட்டியெழுப்புவோம்” என்னும் தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடு ஒன்றும் இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்றது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மதுரம், விக்றி ஜெனரேஷன், ஷாறிபாத், ஹார்மெல், ப்லோமிங் ஆகிய சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் ஏற்பாட்டில் இந்த பேரணியும் மாநாடும் நடத்தப்பட்டது.
அந்த வகையில் சிறுவர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி நடைபெற்ற குறித்த பேரணியானது முல்லைத்தீவு பேருந்து நிலைய வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றது.
அதற்கமைய சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டும், கோசங்கள் எழுப்பப்பட்டும் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு பேரணியின் நிறைவில் சிறுவர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் “எதிர்கால தலைவர்களைக் கட்டியெழுப்புவோம்” என்னும் தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடு ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இப்பேரணி மற்றும் மாநாட்டில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் பிரதிநிதிகள், சிறார்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி, சிறார்கள், பெருந்திரளான பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



