ஜனாதிபதி உறுதியளித்த பின்னரும் சுமந்திரன், வலி. வடக்கு மக்களை கொழும்புக்கு அழைப்பதாக சந்திரசேகர் சாடல்

வலி வடக்கு மக்களுடைய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ள நிலையில் அத்தனை விடயங்களையும் அறிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மக்களை கொழும்பில் போராட அழைப்பது கபடத்தனமான அரசியல் செயற்பாடாகும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்கம் மக்களுக்காக செயற்பட்டு கொண்டிருக்கும் ஒரு அரசாங்கமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அரசாங்கத்தை குழப்புவதற்கு மக்களை தவறான திசையில் திருப்பி தமது அரசியல் நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதற்கு சிலர் முனைகின்றார்கள்.

அண்மையில் வலி.வடக்கு மக்களுடைய போராட்டத்தில் தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கலந்து கொண்டு சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

வலி. வடக்கில் நிலத்துக்காக போராடும் மக்களை அழைத்துக் கொண்டு கொழும்பு ஜனாதிபதி செயலகம் முன் தொடர் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கான அழைப்பை அவர் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கடந்த வாரம் வலி. வடக்கு காணிகள் விடுவிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய நிலையில் அதை அறிந்த சுமந்திரன் கொழும்பில் மக்களை போராட அழைத்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தமது சுயலாப அரசியலுக்காக மேற்கொள்ளும் ஒரு விடயமாக பார்க்கின்ற நிலையில் தமது போராட்டம் மூலமே ஜனாதிபதி காணியை விடுவித்தார் என்ற வங்கு ரோத்து அரசியலை மேற்கொள்வதே இவர்களுடைய நிலைப்பாடாகும் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“யார் போராடினாலும் போராடாமல் விட்டாலும் ஜனாதிபதி மற்றும் எமது அரசாங்கம் மக்களுடைய காணிகளை மக்களுக்கு என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் வேலை திட்டங்களை மேற்கொள்வோம்” என்றும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.