கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதகருக்கு அநீதி இளைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை காலை (24) 8.00 மணிமுதல் பொது சுகாதார பரிசோதகர்கள் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால், பொது சுகாதார பரிசோதகர் பொது சுகாதார பரிசோகர் மிகஸ்தெனிய தன்னிச்சையாக இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்போராட்டம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சு இதுவரை எவ்வித தீர்வையும் வழங்கவில்லை என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று காலை 8.00 மணி முதல் நாடுதழுவிய ரீதியில் உள்ள அனைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்களால் நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து தரவுகள் மற்றும் அறிக்கைகளை வழங்கும் நடவடிக்கை முற்றாக இடைநிறுத்தப்படவுள்ளதுடன், தரவு அமைப்புகளை புதுப்பிக்கும் பணிகளும் முடங்கும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் காலப்பகுதியில் பதிவேற்றப்படாத தரவுகள் இனி ஒருபோதும் அமைப்புகளில் மீளப் பதிவேற்றப்படமாட்டாது எனவும் அச்சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பொது சுகாதார பரிசோகர் மிகஸ்தெனியவின் இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்து நியாயமான விசாரணையை முன்னெடுக்குமாறும், கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகங்களின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சிகளைக் கண்டிப்பதாகவும், நியாயமான விசாரணைக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் தாம் எப்போதும் தயார் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.



