நீளும் இராஜதந்திரத் தலையீடு : விதுரன்

இந்து சமுத்திர பிராந்தியத்தின் மூலோபாய மையப் புள்ளியாக விளங்கும் இலங்கைத் தீவு, உலகளாவிய வல்லரசுகளின் பாதுகாப்பு, வர்த்தக மற்றும் பூகோள அரசியல் நகர்வுகளின் முக்கியமான தளமாக மீண்டும் மாறியுள்ளது.
அண்மையில் இந்து சமுத்திரப்பிராந்தியத்துக்கான அவுஸ்திரேலிய விசேட பிரதிநிதியின் வருகை, உயர் தொழில்நுட்ப ட்ரோன்கள் கையளிப்பு, அமெரிக்காவுடனான பிரசித்திபெறாத இரகசியப் பயிற்சிகள், சீனாவின் தரப்பி லிருந்து வழங்கப்பட்ட ட்ரோன்கள் மற்றும், துறைமுகங்களை மையப்படுத்திய உலக வங்கியின் வர்த்தக ஆய்வுகள், அமெரிக்க உயரதிகாரிகளின் துறைமுக விஜயங்கள் மற் றும் அடுத்த மாதம் எதிர்பார்க்கப்படும் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகை ஆகியவை வெறும் இருதரப்பு உறவுகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு நுட்பமான கடல்சார் மற்றும் பாதுகாப்பு இராஜதந்திரக் களத்தை வெளிப்படுத்துகின்றன.
இவற்றுடன் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் துருக்கியின் ஆசியாவை நோக்கிய ‘Asia Anew’ கொள்கை மற்றும் அதன் பாதுகாப்பு நகர்வுகளும் இணையும் போது, இலங்கை எவ்வாறு உலக வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியைத் தனது தேசிய நலனுக்குச் சாதகமாகக் கையாளப் போகின் றது என்ற பெரும் கேள்வி எழுகின்றது.
கடல்சார் பாதுகாப்பைப் பொறுத்தவரை, அவுஸ் திரேலியாவிடமிருந்து இலங்கைக்குக் கிடைக்கும் உதவிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அவுஸ்திரேலியாவின் இந்திய சமுத்திர பிராந்திய விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி டிம் வாட்ஸ் அவர்களின் இலங்கை வருகையின் போதும், அவுஸ்திரேலிய எல்லைப் படை மற்றும் கடல்சார் எல்லைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரெட் சொன்டர் அவர்களின் வழிநடத்தலிலும் இலங்கை கடலோரப் பாதுகாப்புப் படைத் தலைவர் ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப்பிடம் 12 க்கும் மேற்பட்ட அதிநவீன கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை மனித கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது அதன் தேசிய பாதுகாப்பிற்கு அவசியமாகும். இதேவேளை, அமெரிக்க கடற்படையும் இலங்கை கடற்படையும் இணைந்து திருகோணமலையை மையப் படுத்திய கடற்பரப்புகளில் CARAT 2026 போன்ற விளம்பரப் படுத்தப்படாத கூட்டுப் பயிற்சிகளையும், நடத்தி வருகின் றன. இவற்றுக்கு அமெரிக்கத் தரப்பில் அமெரிக்க கடற்படையின் P-8A Poseidon  போன்ற கண்காணிப்பு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு கடல்சார் கண்காணிப்புத் திறன் பயிற்றுவிக்கப்படுகிறது. இதன் பின்னணியில், அமெரிக்காவின் ‘இந்தோ-பசுபிக் மூலோபாயத்திற்கு’ கொழும்பை ஒரு முக்கிய பங்காளியாக்கும் நுட்பமான பாது காப்பு இராஜதந்திரம் அடங்கியுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் இந்த ஆதிக்க நகர்வு களுக்குப் போட்டியாக, சீனா தனது இராணுவ மற்றும் வர்த்தக செல்வாக்கை இலங்கை மண்ணில் தீவிரமாகச் சம நிலைப்படுத்தி வருகின்றது. சீனா தரப்பிலிருந்து, சீன நிறுவனமான நுர்யபெ மூலம் இலங்கையில் பயணிகள் மற்றும் வான்வழிப் போக்கு வரத்து ட்ரோன் சேவைக்கான முன்னோடித் திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ருவன் கொடித்துவக்கு அறிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளை இணைக்கும் இத்திட்டம் வர்த்தக நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், சீன தொழில்நுட்பங்களின் நுழைவு மேற்கத்திய நாடுகளுக்கொரு சவாலாகும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்து வைத்துள்ள சீனா, கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தையும் இயக்கி வரும் சூழலில், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் தனது கால்தடத்தை பதிப்பது, இந்திய சமுத்திரத்தில் அதன் மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சி திட்டத்தை (பி.ஆர்.ஐ) மேலும் உறுதிப்படுத்துகிறது.
இதேநேரம், பொருளாதார மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு தளத்தில், உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங்கையின் பிரதான துறைமுகங்களின் செயற்பாட்டுத் திறன் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் உயரதிகாரிகள் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஜூலி சங் ஆகியோர் கொழும்பு துறைமுகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் சுமார் 553 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்து வருகிறது. இது சீனா தனது கட்டுப்பாடு வைத்துள்ள கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்திற்குப் போட்டியாக, இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் இலங்கைத் துறைமுகத்தில் நிலைநிறுத்தியுள்ள பொருளாதார-மூலோபாய எதிர்வினையாகும்.
இவற்றுக்கு மத்தியில், இலங்கையின் மிக நெருங் கிய அண்டை நாடான இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் இக்களத்தில் மிக முக்கியமான தீர்மானிக்கும் சக்தியாகும். அடுத்த மாதம் (செப்டெம்பர் 2026) இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்திற்கான ஏற்பாடுகளை இலங்கை யிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த ஆகியோர் சந்தித்து இறுதி செய்துள்ளனர்.
இந்தியாவின் ‘அண்டை நாட்டிற்கு முதலிடம்’ கொள்கையின் கீழ், தனது தெற்கு எல்லையில் சீனாவோ அல்லது மேற்கத்திய நாடுகளோ இராணுவ மையம் அமைப்பதை இந்தியா தனக்கான அச்சுறுத்தலாகவே கருது கிறது. ராஜ்நாத் சிங்கின் இந்த வருகையின் போது முக்கோண பாதுகாப்பு கூட்டாண்மை, திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி மற்றும் கடல்சார் விழிப்புணர்வு தகவல் பகிர்வு குறித்த உடன்பாடுகள் எட்டப் படலாம் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், சர்வதேச அளவில் தனது ‘ஆசியா மீண்டும்’ என்ற வெளியுறவுக் கொள்கையின் மூலம் தெற் காசியாவில் செல்வாக்கை விரிவுபடுத்தி வரும் துருக்கியின் புதிய கரிசனைகளும் கவனிக்கத்தக்கவை. துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் வெளியுறவு மூலோபாயத்தின் கீழ், துருக்கி தனது அதிநவீன ‘Bayraktar’ட்ரோன் தொழில்நுட்பம், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு மூலம் இலங்கையுடன் புதிய உறவை ஏற்படுத்த முயல்கிறது.
இந்திய சமுத்திர பிராந்தியத்தில் ஒரு புதிய மூலோபாய சக்தியாக உருவெடுக்க விரும்பும் துருக்கியின் இந்த நகர்வு, இலங்கையின் இராஜதந்திர களத்திற்குப் புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்துள்ளது.
இத்தகைய சிக்கலான சூழலில், இலங்கை தனது ‘கடல்சார் மூலோபாய இராஜதந்திரம்,’ மற்றும் ‘பாதுகாப்பு இராஜதந்திரம்’ என்பவற்றை மிக எச்சரிக்கையுடன் கையாள வேண்டியுள்ளது.
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு அனைத்து நாடுக ளின் நிதியுதவியும் முதலீடுகளும் தேவைப்படும் நிலையில், எந்தவொரு வல்லரசுப் பக்கமும் சாய்ந்துவிடாமல் நடு நிலைமையை வைத்துக்கொள்வதென்பது மிகச் சவாலான விடயமாகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரையில் வெளிப் படைத் தன்மை கொண்ட கடல்சார் கொள்கை முக்கிய மானது. அதாவது, இலங்கைக் கடற்பரப்பில் நடைபெறும் கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு உதவிகள் குறித்த வெளிப்படைத்தன்மையை பேணுவதன் மூலம், இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையிலான பரஸ்பர சந்தேகங்களைக் குறைக்கலாம்.
அடுத்ததாக துறைமுகங்களின் வர்த்தக மயமாக் குதல் அவசியமாகின்றது.  கொழும்பு, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் வர்த்தக நோக் கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதையும், எந்தவொரு நாட்டின் இராணுவத் தளமாக மாற அனு மதிக்கப்படாது என்பதையும் இலங்கை உறுதியாகப் பிரகட னம் செய்ய வேண்டும்.
வல்லரசுச் சமநிலை பேணல் என்பது மிகப் பெரிய கடியமான விடயம் என்றாலும் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிடமிருந்து கண்காணிப்புத் தொழில் நுட்பங்களையும், சீனாவிடமிருந்து உள்கட்டமைப்பு முத லீடுகளையும், இந்தியாவுடன் இணைந்து பிராந்திய பாதுகாப்பையும் பேணி, துருக்கி போன்ற புதிய சக்தி களுடன் பாதுகாப்பு வர்த்தக உறவை ஏற்படுத்துவதன் மூலம் பன்முகப்படுத்தப்பட்ட இராஜதந்திரத்தை இலங்கை தொடர லாம். ஆனால் தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வி, மேற்படி நகர்வுகளின் கூரிய உணர்திறனை உணர்ந்து தீர்மானங்களை எடுக்கும் அரசியல் இயலுமை நாட்டின் தலைமைக்கு காணப்படுகின்றதா என்பதாகும்.