யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் உள்ளிட்ட 22 பேர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு இன்று (20) அல்லைப்பிட்டியில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
நினைவேந்தல் நிகழ்வையொட்டி அல்லைப்பிட்டி சந்தியிலிருந்து அமைதிப் பேரணி ஒன்று ஆரம்பமானது.
கிறிஸ்தவ மதகுருமார்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்ட இந்தப் பேரணி, அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகளும் நினைவஞ்சலி கூட்டமும் இடம்பெற்றன.
ஈழப் போரின் நான்காம் கட்டம் தீவிரமடைந்திருந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20ஆம் திகதி, யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோதே அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளாரும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸும் காணாமல் ஆக்கப்பட்டனர்.
அன்று பிற்பகல் அவர்கள் பண்ணைப்பாலம் பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவக் சோதனைச்சாவடியைக் கடந்து சென்றமைக்கான பதிவுகள் இருந்தபோதிலும், அதன்பின்னர் அவர்களின் நிலை குறித்து இதுவரை எவ்வித உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை.
இந்தநிலையில், இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள போதிலும், காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மை இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்ற ஆறாத் துயருடனும் நீதிக்கான எதிர்பார்ப்புடனும் உறவினர்கள் இந்த வழிபாட்டில் பங்கெடுத்தனர்.



