அரச ஊழியர்களின் ஆடை விவகாரத்தில் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம் :சாணக்கியன் வலியுறுத்தல்

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான விதிமுறைகள் அரசாங்கத்தின் சுற்றுநிருபங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்பதால், இதற்காக தமிழ் மக்களையோ அல்லது தமிழ் அதிகாரிகளையோ குற்றம்சாட்டுவது தவறானது என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20? உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், இந்துக்கள் பொட்டு அல்லது திருநீறு அணிவதும், பௌத்தர்கள் கையில் பிரித் நூல் அணிவதும் அவர்களின் மத அடையாளங்கள் எனக் குறிப்பிட்டார்.

அதேபோன்று முஸ்லிம் பெண்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப ஆடை அணிவதும் மத சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும் என்பதால், அரச ஊழியர்கள் தமது மத அடையாளங்களைப் பேணியவாறு பணியாற்றுவதற்கு ஏற்ற வகையில் அரசாங்கம் தெளிவான சுற்றுநிருபங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த கால அரசியல் முரண்பாடுகளைப் பயன்படுத்தி தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வதற்கும் ஆதரவளித்த சிலரே, தற்போது தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

தமிழ் பேசும் அரசியல் கட்சிகளிடையே சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், அவற்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொண்டு எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

மேலும், கல்முனை மருத்துவமனை விவகாரத்தில் மருத்துவமனை அதிகாரிகளையும் அந்தப்பகுதி மக்களையும் இனவாதிகளாகச் சித்தரிக்கும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக சாணக்கியன் தெரிவித்தார்.

அத்துடன் மதம் மற்றும் இன அடையாளங்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தாமல் அனைத்து சமூகங்களின் உரிமைகளையும் மதித்துச் செயற்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அழைப்பு விடுத்தார்.