இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்களின் இலங்கைக்கான உத்தியோக பூர்வ வருகையின் பொழுது சிறிலங்கா கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பில் இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளை வந்துவிட்ட பாதி வழியில் இருந்து தொடர்வது நல்லது எனவும் மீளவும் முதலாவது கட்டத்திற்குச் சென்று தொடங்க வேண்டும் என்கிற தேவையில்லையெனவும் கூறியதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. அதாவது சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு 14. 11.1987 ம் திகதிய 13வது திருத்தத்தின் மூலம் அதன் 17 வது அத்தியாயமான நிதிக்கு உபபிரிவாக 17 அ பிரிவாக மாகாணசபைகளை தாபித்தல் தொடர்பாக இணைக்கப்பட்டனவற்றையே இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி “பாதி வழி” எனக் குறிப்பிட்டுள்ளார் என்பதே பலரினதும் கருத்தாக உள்ளது. சிறிலங்காவின் 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் நீதிக்கான கோரிக்கை அனைத்துலக மனித உரிமைகள் பேரவையில் எழுப்பப்பட்ட பொழுதும் இந்தியா தமிழர்களின் கண்ணியமான வாழ்வுக்கு வழியென இதனையே கூறியது. இன்றும் 17 ஆண்டுகளின் பின்னரும் அதனையே கூறுகிறது என்பதனையும் முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா ஈழத்தமிழர்களைத் தேசமாகவே இனப்படுகொலை செய்த 2009 க்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் 2015இல் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கான கண்ணியமான வாழ்வை தான் அமைக்கப்போவதாகக் கூறிய பொழுதும் இதே மாகாணசபையினையே மையப்படுத்தி அதனைக் கூறியது என்பதையும் இலக்கு எடுத்துரைக்க விரும்புகின்றது.
இந்நேரத்தில் மாகாணசபைகள் குறித்த மீள்சிந்திப்பு காலத்தின் தேவையாகிறது. மாகாணசபைகள் வழி சிறீலங்காவின் நிதியினை மாகாணங்களுக்கு பகிர்வதன் மூலம் நிதிப்பரவலாக்கத்தால் சிறிலங்காவின் ஒற்றையாட்சி முறைமையுள் மாகாணங்களுக்கான பொருளாதார வளர்ச்சியை சமப்பபடுத்தி எல்லா மாகாணங்களதும் உற்பத்தியை பெருக்கிச் சிறிலங்காவின் பொருளாதாரத்தினைப் பலப்படுத்தி சிறிலங்காவை பலமான அரசாங்கமாக நிலைப்படுத்தலே இந்த மாகாணசபைகளின் நோக்கமாக உள்ளது. இந்த விடயத்தில் நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி சிறிலங்காப் பாராளுமன்றத்தினை கடந்து தனது நேரடி நிர்வாகத்தில் மாகாணசபைகளுக்கான ஆளுநர்களை நியமித்து தேர்ந்த்தெடுக்கப்பட்ட மாகாணசபைகளின் முதலமைச்சர்களையும் உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் இந்த முறைமை சிறிலங்கா சனாதிபதிக்கு அதிகாரங்களை அளித்தது. அந்த வகையில் மாகாணசபைகளுக்கான நிலப்பயன்பாட்டு உரிமை மற்றும் அந்நிலத்தில் முதலீடுகளுக்கும் உற்பத்திகளுக்குமான பாதுகாப்புக்கான மாகாணசபைக்கான பொலிசார் என்பன மாகாணசபைகளுக்குரியதா இல்லை சனாதிபதிக்குரியதா என்பதில் பிரச்சினைகள் தோன்றி இன்றும் தொடர்கின்றன. மாகாணசபைகள் வழி சிறிலங்காவின் உற்பத்திப் பெருக்கம் என்பதனை மையப்படுத்தியே சனாதிபதிக்கான பட்டியல்களும் மாகாணசபைக்கான பட்டியல்களும் பொதுவான பட்டியல்களும் அட்டவணைப்படுத்தப்பட்டன. இவை எந்த வகையிலும் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களின் தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு (National Question) உரிய தீர்வாக 1987 இல் கட்டமைக்கப்படவில்லை என்பதே வரலாற்று உண்மை என்பதை இலக்கு மீள்நினைவூட்ட விரும்புகிறது.
இவ்விடத்தில் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினை என்பது அவர்களது இறைமையின் அடிப்படையில் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி தங்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்தல் என்பதனால் ஈழத்தமிழரின் இறைமை குறித்த வரலாற்றினையும் மீளவும் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. காலனித்துவ போரத்துக்கேய அரசால் யாழ்ப்பாண அரசின் இறைமை 116 ஆண்டு முயற்சியின் பின் 1621ல் போர்த்துக்கேய இறைமைக்குள் கைப்பற்றப்படடது. 1658 இல் டச்சுக்காரரிடம் போர்த்துக்கேய காலனித்துவ அரசின் இறைமை சென்றடைந்த பொழுது யாழ்ப்பாண அரசின் இறைமை டச்சுக்காரரைச் சென்றடைந்தது. 1796 இல் இலண்டன் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் இலங்கைத் தீவின் டச்சுக்காரரின் காலனித்துவ அரசின் இறைமை சென்றடைந்த பொழுது யாழ்ப்பாண அரசின் இறைமை அவர்களைச் சென்றடைந்து 1802 இல் பிரித்தானிய காலனித்துவ அரசிடம் சென்றடைந்தது. 1832 இல் பிரித்தானிய காலனித்துவ அரசிடம் வன்னிச் சிற்றரசு வீழச்சியுற்ற பொழுது கூட்டு மொத்தமாக யாழ்ப்பாண அரசின் இறைமையும் வன்னிச் சிற்றரசின் இறைமையுமான ஈழத்தமிழரின் இறைமை பிரித்தானிய முடிக்குரிய ஆட்சிக்கு உட்பட்டது. 1833 முதல் 1948 வரை 115 ஆண்டுகள் பிரித்தானிய முடிக்குரிய இறைமையாக இருந்த ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே அமைத்துக் கொள்ளும் அவர்களின் பிரிக்க இயலாத தன்னாட்சி உரிமையின் வழி பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட இலங்கைத் தீவின் சிங்களவர்களும் தங்கள் கோட்டே கண்டி ஆட்சியின் இறைமைகளை மீளவும் பிரித்தானியக் காலனித்துவத்திலிருந்து பெறப்போராடிய நிலையில் இலங்கைத் தமிழர்களும் சிங்களவர்களும் பிரித்தானிய காலனித்துவத்துக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தில் தனித்தன்மைகளுடன் கூட்டாண்மையுள்ள பங்காண்மைகளாகப் போராடியமை உலக வரலாறாக உள்ளது.
இதனை ஏற்ற 1920களின் நடுப்பகுதிச் சிங்களத் தலைவரான எஸ் டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க பிரித்தானியா கைப்பற்றிய இலங்கைத் தீவின் மூன்று அரசுக்களின் பகுதிகளும் மூன்று சபைகளாக உள்ள முறைமையில் சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென அவற்றை யாப்பானய ரட்ட சபாவ, கண்டி ரட்டசபாவ, கோட்டே ரட்ட சபாவ என சிங்களத்தில் பெயரிட்டு கண்டி ரட்டசபாவினை கண்டியில் நடைமுறைப்படுத்தவும் முயன்றமை இலங்கைத் தீவின் வரலாறு. இலங்கையின் இடதுசாரிக்கட்சிகள் எல்லாமே அக்காலகட்டத்தில் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்காகக் குரல் கொடுத்தமையும் இலங்கையின் வரலாறாக உள்ளது. 01.08. 1944 இல் பிரித்தானியக் கடற்படையின் திருகோணமலை வைத்தியராகக் கடமையாற்றிய தமிழகத்தின் தென்ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ் பொன்னையா அவர்கள் காலனித்துவ நாடுகளின் செயலாளர் ஸ்டான்லி ஒலிவர் பிரெட்ரிக் ஜோர்ஜ்க்கு அனுப்பிய “ “தமிழ் சிலோனும் மற்றைய சிலோனும்” (Tamil Ceylon and the rest of Ceylon) என்னும் விண்ணப்பத்தில் ஈழத்தமிழர்களுக்கான தனியாட்சியாக யாழ்ப்பாண அரசினதும் வன்னியரசினதும் நிலப்பரப்புக்களை சுதந்திரம் மூலம் வழங்கும் படி கோரியிருந்தமை இந்தியத் துணைக்கண்டத்தினரும் ஈழத்தமிழரின் இறைமைக்கு கோரிக்கை விடுத்த வரலாறாக உள்ளது.
அமரர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் 03.11.1945 இல் காலனித்துவச் செயலாளர் கோலுக்கு சோல்பரி அரசியலமைப்பு குறித்து அனுப்பிய விரிவான விளக்கத்தில் “ சிறுபான்மை இனத்தவருள் தமிழர்கள் மிகமுக்கியமானவர்கள். அவர்களே நாட்டின் மூலமான குடிகள். தீவின் ஆட்சியாளர்கள் தனிப்பட்ட அரசுக்களை அமைத்து இலங்கை முழுவதிலும் நீண்ட ஆண்டு காலம் அதிகாரம் செலுத்தியுள்ளனர். தமிழர்கள் சிங்களஅரசர்கள் தமிழர்களின் இனக்கூறு என்பதனைப் பெருமையுடன் நினைவு கூறுகின்றனர். பிரித்தானியர் ஆட்சியைத் தொடங்குவதற்கு முன் நூற்றாண்டு முழுவதும் ஆட்சியாளர்களாகத் தமிழர்களே இருந்தனர் ( Of the Minorities, Tamils from the most important entity, they were the original inhabitants and rulers of the Island, who establish independent Kingdoms and even exercised sway over the entire Island over a long period of years. They remember with pride that the Kings of the Singalese were largely of Tamil extraction and that for quite a century till the British occupation the ruling dynasty was wholly Tamil) என ஈழத்தமிழர்களின் இறைமையின் தொன்மையையும் தொடர்ச்சியையும் சட்ட ஆவணப்படுத்தினார். 15.01. 1946 இல் அகில இலங்கைத் தமிழக்காங்கிரசின் செயலாளர் எஸ். சிவசுப்பிரமணியம் அவர்கள் அக்கால லேபர்கட்சியின் பிரதமர் அட்லி அவர்களுக்கு அனுப்பிய கோரிக்கையில் உலகில் சிறுதேச இனங்களின் தன்னாட்சி உரிமைக்குக் குரல் கொடுத்த லேபர் கட்சி ஏன் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்தவில்லையெனக் கடிதம் அனுப்பியிருந்தார். இவைகள் எல்லாம் ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவில் இறைமையுள்ள மக்கள் என்பதற்கான வரலாற்று ஆவணங்கள்.
ஆயினும் பிரித்தானியா ஈழத்தமிழர்களின் இறைமையை தனியாக மதித்து ஈழத்தமிழர்களின் தன்னாட்சியை உறுதி செய்யாது, தான் செயற்கையாக உருவாக்கிய சிலோன் என்ற அரசின் சிலனிஸ் என்ற தேசியத்துக்கான சுதந்திரமாக 04.02. 1948 இல் சுதந்திரத்தை வழங்கியது. இதனால் காலனித்துவத்தால் தீர்க்கப்படாத அனைத்துலக நாடுகளின் மன்றத்தால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக ஈழத்தமிழர் தேசிய பிரச்சினை இன்று வரை தொடர்கிறது. சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக்குள் ஈழத்தமிழர்களின் விருப்பின்றி சோல்பரி அரசியலமைப்பின் மூலம் ஈழத்தமிழர்களின் இறைமையைப் பிரித்தானிய காலனித்துவ அரசு உட்படுத்தியது. ஆயினும் அக்கால ஈழத்தமிழர்களின் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பினை ஈடுசெய்யும் வகையில் சோல்பரி அரசியலமைப்பின் 29(2) இன் படி சிறுபான்மை மதங்களுக்கோ இனங்களுக்கோ எதிரான சட்டம் சிலோன் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால் பிரித்தானிய பிரிவிக்கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யலாமென அரசியலமைப்புப் பாதுகாப்பு பிரித்தானியாவால் வழங்கப்பட்டது.
இதனாலேயே 1948 முதல் 1956 வரை எட்டு ஆண்டுகள் பிரித்தானியாவிடமே சிலோனின் மீயுயர் இறைமை தொடர்ந்தும் உள்ளதெனச் சிலோனுக்கு தனி உறுப்புரிமை கொடுக்கக் கூடாதென ரஸ்யா இருமுறை பாதுகாப்புச் சபையில் தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தியது. 1964 இல் ரணசிங்கி என்பவரின் வழக்கில் பிரித்தானிய பிரிவிக் கவுன்சில் 1833ம் ஆண்டு நீதிச்சாசனத்தின் கீழேயே தொடர்ந்தும் சிலோனின் நீதித்துறை உள்ளதெனத் தீர்ப்பளித்த பின்னணியில் 1969 கோடீஸ்வரன் வழக்கில் சிங்களம் மட்டும் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதென பிரிவிக் கவுன்சில் அளித்த தீர்ப்பு ஈழத்தமிழர்களின் இறைமையின் மீயுயர் இறைமையாளராகப் பிரித்தானிய முடியே உள்ளதென்பதை உறுதிப்படுத்தியது. இதனாலேயே 22.05. 1972 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான சுதந்திரக்கட்சி இடதுசாரிகள் கூட்டாட்சி, சோல்பரி அரசியலமைப்பை வன்முறைப்படுத்தி தன்னிச்சையாக சிலோன் பாராளுமன்றக் கட்டிடத்துக்கு வெளியே நவரங்கலாவில் சிங்கள பௌத்த சோசலிசக் குடியரசை பிரகடனப்படுத்தி பிரித்தானிய அரசி மாண்பமை 2வது எலிசபேத் அவர்களினது தலைமை ஆளுநர் என்ற தலைமைத்துவத்திலிருந்து விலகி ஈழத்தமிழர்களை அரசற்ற தேசஇனமாக சிறிலங்கா மாற்றியது.
இதனால் ஈழத்தமிழர்களின் இறைமை 22.05. 1972 இல் ஈழத்தமிழர்களிடம் இயல்பாகவே மக்கள் இறைமையாக மீண்டதன் வரலாறே 1978 முதல் 2009 வரையான ஈழத்தமிழர்களின் நடைமுறையரசும் 2009 இல் அதனை சிறிலங்கா இனஅழிப்பால் ஒடுக்கியதும் இன்றுவரை ஈழத்தமிழர்கள் தங்கள் இறைமையை மீளுறதி செய்வதற்கு சனநாயக வழியில் போராடுவதுமான வரலாறு. இது எந்த வகையிலும் பிரிவினையல்ல. பிரிக்க இயலாத அடிப்படை மனித உரிமையான தன்னாட்சி உரிமைக்கான ஈழத்தமிழினத்தின் மனித உரிமைப்போராட்டம் என்பதனை ஈழத்தமிழர்களின் “இசட்” “அல்பா” இளையதலைமுறையினர்க்கு தாய்தந்தையரும் மற்றோரும் எடுத்துரைக்க வேண்டிய காலமிது என்பதனை இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது. இந்த வரலாற்றை ஈழத்தமிழர்கள் தெளிவாகத் தாம் தெளிந்து உலக மக்களுக்கு எடுத்துரைத்து இது குறித்த உலக நாடுகளின் தலைவர்களின் கருத்து என்ன என்பதனை அறிய வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினையென்றால் என்ன என்பதனை இன்றைய உலகம் அறிந்து அவர்களின் வெளியக தன்னாட்சி உரிமையினை அங்கீகரித்து அவர்களுக்கான பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் உறுதிப்படுத்த உதவ முடியுமென்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.




