இலங்கையில் மேலும் முதலீட்டு வாய்ப்புகளை CCCC ஆராய்கிறது

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் (CCCC) நிறுவனத்தின் ஜாங் பிங்னான் தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவை நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான தற்போதைய மற்றும் முன்மொழியப்பட்ட திட்டங்கள் குறித்து முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதாக CCCC பிரதிநிதிகள் தெரிவித்தனர். மேலும், இலங்கையில் குறிப்பிடத்தக்க அளவில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு நிறுவனத்தை ஊக்குவித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தளவாடங்கள், டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமது முதலீடுகளை விரிவுபடுத்துவதில் ஆர்வமாக இருப்பதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்தத் துறைகளில் இலங்கை ஒரு பிராந்திய மையமாக உருவெடுப்பதற்கும், அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தமது முதலீட்டுத் திட்டங்களின் கீழ் பணியமர்த்தப்படும் ஊழியர்களில் 90 சதவீதமானோர் இலங்கையர்களாக இருப்பார்கள் என்றும், இதன் மூலம் கணிசமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் CCCC பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு உறுதியளித்தனர்.