இலங்கைச் சிறைச்சாலைகளில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதாகவும், கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக நடத்தப்படுவதாகவும் முன்னாள் இராணுவ மேஜரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அஜித் பிரசன்ன விசனம் வெளியிட்டுள்ளார்.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினால் நேற்று சனிக்கிழமை (08) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் என்னை விடவும் அதிக சிறை அனுபவம்பெற்ற ஒரு சட்டத்தரணி இருக்க முடியாது. 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காகவே நான் முதன்முதலாக கைது செய்யப்பட்டேன். நாமால் ராஜபக்ஷ, டி.வி. சானக்க, சம்பத் அதுகோரல, பிரசன்ன ரணவீர மற்றும் உபாளி கொடிகார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்டு தங்காலை சிறைச்சாலையிலும், பின்னர் அங்குணகொளபெலெஸ்ஸ சிறையிலும் அடைக்கப்பட்டேன்.
அதன் பின்னர், 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று, 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பு நடத்தி சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டேன்.
வெலிக்கடை சிறைச்சாலையின் எச் பிரிவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுடன் மாலை ஐந்து மணிக்கு பூட்டப்படும் சிறிய அறைகளில் நான்கு பேர் வரை அடைக்கப்படுகிறார்கள். அங்கு கழிப்பறை வசதியோ நீரோ கிடையாது. ‘மீயா’ எனப்படும் சிறிய தகரப் பாத்திரங்களையே கழிப்பறையாகப் பயன்படுத்தி, காலையில் கைதிகளே சுத்தம் செய்ய வேண்டும்.
சாப்பல் பிரிவிலும் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாததால், கைதிகள் கீழேயுள்ள தொட்டிகளிலிருந்து வரிசையில் நின்று தண்ணீர் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. வனாத்தமுல்ல மற்றும் சேதவத்தை போன்ற பகுதிச் சேரிகளில் வாழும் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் குற்றப் பின்னணிக்குத் தள்ளப்படுகிறார்கள். சிறைக்குள் கைதிகளுக்கு முறையான ஆடைகளோ, சவர்காரங்களோ வழங்கப்படுவதில்லை.
வெளிச்சோதனைப் படையினரும் அதிகாரிகளுமே சிறைக்குள் போதைப்பொருள், புகையிலை மற்றும் கைபேசிகளைக் கடத்துகிறார்கள். அதைக் கண்டறியும் நவீன வருடி இயந்திரங்களை அதிகாரிகளே திட்டமிட்டுப் பழுதாக்கி வைத்துள்ளார்கள். அதிகாரிகளைச் சோதனை செய்யாத அமைப்பும், கைதிகளை மட்டும் முழுமையாக ஆடைகளைக் களைந்து அத்துமீறிச் சோதனை செய்யும் மனிதநேயமற்ற நடைமுறையுமே அங்கு நிலவுகிறது.
நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளதால் கைதிகளின் எண்ணிக்கை 41,000 ஆக உயர்ந்துள்ளது. காலி, வெலிக்கடை, கொழும்பு மறுவாழ்வுச் சிறை, மஹர, மெகசின், நீர்கொழும்பு மற்றும் குருவிட்ட என அனைத்துச் சிறைச்சாலைகளும் கொள்ளளவை விடவும் பல மடங்கு அதிகமான கைதிகளைக் கொண்டுள்ளன. சர்வதேச மண்டேலா விதிகளின்படி ஒரு கைதிக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச இடைவெளி மறுக்கப்பட்டு, கைதிகள் மீன் அடைத்தது போல படுத்து உறங்கும் அவல நிலை நிலவுகிறது.
சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் 37 வது பிரிவின்படி நீதிபதிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறைச்சாலைகளை நேரடியாகச் சென்று ஆய்வு செய்யும் அதிகாரம் இருந்தும், கடுவெல தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவைத் தவிர வேறு எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் அந்தப் பொறுப்பைச் சரியாக நிறைவேற்றவில்லை.
எனவே, நீதிபதிகளும் நீதியரசர்களும் வாரம் ஒரு மணி நேரமாவது தங்கள் எல்லைக்குட்பட்ட சிறைச்சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டால் மட்டுமே இந்த மனித உரிமை மீறல்களையும் ஊழல்களையும் சற்றேனும் கட்டுப்படுத்த முடியும் என்றார்.



