சீரற்ற வானிலையால் மலையகம் ஸ்தம்பித்தது!

கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மற்றும் சப்ரகமுகவ மாகாணங்கள் வெகுவாக பாதிக் கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த இரண்டு மாகாணங்களிலும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அண்மைய அறிக்கையின்படி, மத்திய மாகாணத்தில் 3,289 குடும்பங்களைச் சேர்ந்த 12,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சப்ரகமுவ மாகாணத்தில் 735 குடும்பங்களைச் சேர்ந்த 2935 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக பாதிப்பு பதிவான மத்திய மாகாணத்தில் 8 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவானதுடன் 392 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது இருப்பிடங்களை இழந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக் கப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் ஏழு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். அத்துடன் கண்டி மாவட்டத்தில் ஒரு உயிரிழப்பு சம்பவம் பதி வாகியுள்ளது.
அதேநேரம் நுவரெலியா மாவட்டத்தில் 7,572 பேரும் கண்டி மாவட்டத்தில் 5,371 பேரும் பாதிக்கப்பட்டதுடன் சப்ரகமுவ மாகணத்தின் கேகாலை மாவட்டத்தில் 448 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 2487 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகா மைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மலையகத்தின் நான்கு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு “டித்வா” புயல் காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்ட மலையக பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல பகுதிகளில் வீதி போக்குவரத்துகள் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளன. பல இடங்களில் வீதிகள் தாழிறங்கி உள்ளதுடன் மலைப்பாங்கான பகுதிகளும் தாழிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  நுவரெலியா மாவட்டத்தில் ஏற் பட்ட வெள்ளம் பொருளா தார இழப்பையும் ஏற்படுத்தி மக்களை மீளாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக மாவட்ட செயலாளர் துசாரி தென்ன கோன் தெரிவித்தார். அதிக மழை வீழ்ச்சி காரணமாக மலையகத்தின் பிரதான நீர்த்தேக்கங்களான கொத்மலை, காசல்ரி மற்றும் விமலசுரேந்திர உள் ளிட்ட நீர்த்தேக்கங்களின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன.
அதிகளவான மழை வீழ்ச்சி மற்றும் மண்சரிவு சம்பவங்கள் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு மத்திய மாகாணத்தின் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டன. பல பகுதிகளில் பாடசாலை மாணவர்கள் தங்களது பாடசாலை உடைமைகளை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் 300 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளன.
பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பற்ற வகையில் ஆறுகளை அண்டி அமைக்கப்பட்டிருந்த வீடுகளே அதிக பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன. அத்துடன் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறுமாறு முன்கூட்டியே அறிவித்திருந்ததாக தெரியவருகிறது. எனினும் தங்களுக்கென உரிய இருப்பிடம் கிடைக்காத காரணத்தி னால் பலர் ஆபத்து நிறைந்த தங்களது வீடுகளிலேயே இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக் கப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் இந்த வாரம் பாராளுமன்றத் தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்ட மான் மலையக மக்கள் சார்ந்த முக்கிய பிரச்சினை ஒன்றை வெளிப்படுத்தினார். பாராளுமன்றத்தில் அவர் கருத்துரைக்கையில், “டிட்வா புயலால் பாதிக்கப்பட்டு தற்போது தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளவர்களை தாம் நேரில் சந்தித்து பேசிய போது, காவல்துறையும் தோட்ட நிர்வாகமும் இணைந்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட அபாயப் பகுதிகளுக்கே மீண்டும் செல்லுமாறு அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்திருந்தார்கள்.
இவ்வாறு மீளக் குடியமர்த்தப்பட்ட பின்னர் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை யார் ஏற்பது?” என்ற கேள்வியை முன்வைத்தார். ஜீவன் தொண்டமான் தொடர்ந்து உரையாற்றுகையில், “அண் மையில் ஜனாதிபதியை சந்தித்து எங்களுடைய முக்கிய மான கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். அதில் குறிப்பாக மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர் பான கோரிக்கையும் உள்ளடங்கியிருந்தது.
ஜனாதிபதியிடம் காணி உரிமை தொடர்பாக பேசும்போது, இயற்கை வளங்களின் பாதுகாப்பு தொடர் பாக கவனம் செலுத்தி பேசியிருந்தார். நான் அதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதைவிட எங்கள் மக்களுக்கான காணி உரிமை மிக முக்கியமானதா கும். அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்ற வகையில், சரியான பதிலை வழங்காமல் மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சியினரை குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வீடுகளை மக் களுக்காக கட்டுவதில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்ந்து வந்த அரசாங்கங்களினால் அல்ல; பெருந்தோட்ட நிறுவனங்கள்தான் பிரச்சினை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.