இலங்கையில் மனிதப்புதைகுழிகள் விவகாரத்தில் பிரித்தானிய துறைசார் நிபுணர்களின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும், மூதூர் படுகொலைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் கோரியுள்ளார்.
பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திடம் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்திருந்த வேளையில், 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று ‘பட்டினிக்கு எதிரான இயக்கம்” அமைப்பின் 17 தன்னார்வத் தொண்டுப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் அதற்குப் பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது, இலங்கையில் மனிதப்புதைகுழிகள் விவகாரத்தில் பிரித்தானிய துறைசார் நிபுணர்களின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக யாழ். செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் பிரஸ்தாபித்த உமா குமாரன், பாராளுமன்ற அமர்வில் தான் இதுபற்றி உரையாற்றியதன் பின்னர், அம்மனிதப்புதைகுழியில் இருந்து குழந்தைகள் உள்ளடங்கலாக 400 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று இந்த விவகாரத்தில் உள்நாட்டுப் பொறிமுறைகள் தொடர்ந்து தோல்வியடைந்திருக்கும் நிலையில், குறித்த மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை சர்வதேச கண்காணிப்பின்கீழ் கொண்டுவரவேண்டும் என்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களும், தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.



