சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக நிகழும் மோதல்கள் மற்றும் குழப்பங்கள் என்பன அரசாங்கம் தனது நிர்வாகக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதை வெளிப்படையாகக் காட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் கைதிகள் அடைக்கப்படுவதால், அங்கு அடிப்படை வசதிகள் இன்றி பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
இத்தகைய நெருக்கடியான சூழல் கைதிகளிடையே கடும் அதிருப்தியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக, சிறைச்சாலையில் நீண்ட காலம் துன்பப்படுவதை விட மோதல்களில் ஈடுபடுவதோ அல்லது உயிரிழப்பதோ மேல் என்ற ஆபத்தான மனநிலைக்கு கைதிகள் தள்ளப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.



