தமிழர்களின் காணிகளை விடுவிக்க கோரி மன்னாரில் மாபெரும் போராட்டம்!

06. தமது பூர்வீக நிலங்களை உடனடியாக காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியும், நீண்ட காலமாக தங்களின் பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து போராடி வரும் தமிழ் மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியும் இன்று (7) காலை 10 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்டத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

“காணி இழந்த மக்களின் குரல்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டம் யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்றது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களும் கிராம மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதேநேரம் மக்கள் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதோடு வடக்கின் ஏனைய பகுதிகளில் இருந்தும் மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் இதன்போது கோஷங்களை எழுப்பியிருந்தனர்.