இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு சார் ஒப்பந்தங்கள் பல கைச்சாத்திடப்பட்டுள்ளன. வடக்கில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெறுவதை தடுப்பதற்கும் எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவிடம் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் மேலதிக கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெறுவதை தடுக்கும் வகையில் தான் அனைவரும் செயற்பட வேண்டும்.அதுதான் முக்கியமானது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இலங்கை – இந்திய நல்லுறவுக்கு அமைவாக 2025.04.05 ஆம் திகதியன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. வடக்கு மாகாணத்தில் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்ய இந்தியா பாரிய நிதியுதவி வழங்கியுள்ளது.இருப்பினும் அவை தற்போது பயன்படுத்தப்படுவதில்லை.



