ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் !

நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று (05) புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இந்தியாவின் நிதி உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. சந்திப்பைத் தொடர்ந்து, 350 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அடிப்படையிலான கடன் வசதி தொடர்பான ஒப்பந்தங்கள் இரு தரப்பினராலும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த கடன் வசதிகள், டித்வா புயலுக்குப் பின்னர் இந்தியா இலங்கைக்கு அறிவித்த 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள்கட்டமைப்பு உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாகும்.

இந்த நிதியின் ஊடாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள்கட்டமைப்பு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பேரிடருக்குப் பின்னர் ஏற்பட்ட கொள்வனவு தேவைகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவாக மீளக் கட்டியெழுப்பவும், இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கவும் இந்தியா உறுதிபூண்டுள்ளதாக இந்த ஒப்பந்தப் பரிமாற்றம் எடுத்துக்காட்டுவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.