நீதித் துறையில் புதிய சீர்திருத்தங்கள் மக்களுக்காகவே கொண்டு வரப்படுகிறது – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ!

நாட்டில் நீதித்துறை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நீண்ட காலமாக முன்மொழியப்பட்டு வந்த நிலையில்  புதிய சீர்திருத்தங்களை மக்களுக்காகவே கொண்டு வரப்படுகிறது என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக, நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மற்றும் ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்தை மகா விகாரைகளுக்கு செவ்வாய்க்கிழமை (03) விஜயம் செய்தனர்.

அங்கு மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே நலிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,

நீதித்துறையில் மட்டுமன்றி, இன்னும் பல தொழில் துறைகளிலும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் உள்ளன.

இது தொடர்பாகப் பொதுவாக்கெடுப்புக்குச் (Referendum) செல்ல வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசியலமைப்பின் படி பொதுவாக்கெடுப்புக்குச் செல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், விவகாரம் தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டால், 99 சதவீதமான மக்கள் ஒரே மனதுடன் அதற்கு ஆதரவளிப்பார்கள்.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்படும் காலம், பணம் மற்றும் விரயங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, தங்களது வழக்குகள் விரைவாக முடிவுக்கு வந்து நீதி கிடைக்க வேண்டும் என்பதையே மக்கள் விரும்புவார்கள் எனவும், அதற்கு அவர்கள் ஒருபோதும் எதிர்ப்புக் தெரிவிக்க மாட்டார்கள்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அந்த இடைவெளியை நிரப்புவதற்காக தற்போதுள்ளவர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதில் தவறு எதுவும் இல்லை.

மற்றொரு விஷயம் என்னவென்றால்,  நமது நாட்டின் மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளமை ஆய்வுகள் மூலம் வௌியாகியுள்ளது. பலரால் 60 முதல் 65 வயது வரை பணியாற்ற முடியும்.

நாட்டில் உள்ள விசேட வைத்தியர்களுக்கு 64 வயது வரை பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது. அந்த வாய்ப்பை நீதித்துறைக்கு மட்டுமன்றி மேலும் பல துறைகளுக்கும் வழங்கவே இந்த புதிய சீர்திருத்தங்கள் மூலம் எதிர்பார்க்கிறோம்.

கடந்தகால அரசாங்கங்கள் இந்தப் பணிகளைச் செய்யவில்லை. அவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, பிரச்சினைகள் அதிகரிப்பதற்கே வழியமைத்தனர்.

இன்று கூச்சலிடுபவர்களின் ஆட்சியின் இறுதிக் காலத்தில், இந்த நாட்டின் சிறைச்சாலைகளில் இருக்க வேண்டிய கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமாகச் சிறைகள் நிரம்பியிருந்தன.

அவர்கள் ஒரு புதிய சிறைச்சாலையையாவது கட்டினார்களா? ஒரு சட்டத்தையாவது மாற்றினார்களா? அவர்கள் செய்தது பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகம் விரிவடைவதை  அனுமதித்தது மட்டுமே.

நாங்கள் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை அடக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் போது சிறைச்சாலைகளில் சில சிக்கல்கள் எழுகின்றன.

புதிய சீர்திருத்தங்களின் மூலம் அந்த நெருக்கடிகளைக் குறைத்து, தற்போதைய காலத்திற்குப் பொருத்தமான ஒரு புதிய நீதித்துறை அமைப்பை நிறுவுவதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.