மாகாணசபைத்தேர்தல்கள் உடனடியாக நடாத்தப்பட்டு, அவற்றுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்குதல் உள்ளடங்கலாக தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (3) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியனும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமசந்திரன், பா.உ செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முருகேசு சந்திரகுமாரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பா.உ ரவூப் ஹக்கீம் மற்றும் நிஸாம் காரியப்பரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமீர் அலி, பா.உ மொஹமட் தாஹிர் மற்றும் பா.உ மொஹமட் தாஹிரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பா.உ ஜீவன் தொண்டமானும், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் பாரத் அருள்சாமியும் கலந்துகொண்டிருந்தனர்.



