உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த நீதிமன்ற உத்தரவுகள் கண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் அச்சம்

ஐந்து கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கு தற்போது அச்சம் ஏற்பட்டிருக்கும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போதும் 269 அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கின்றார்கள்.

அந்த செயலை அறிந்திருந்தும் தடுக்கவில்லை என்பதற்காக அவர்களுக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.

இதனைப் பார்த்தவுடன் இன்னும் சிலருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

“இன்னும் ஒருவர் 10 கோடி தண்ட பணம் செலுத்தியவர் இருக்கின்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அது மாத்திரம் இன்றி உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருந்தவர்கள் உள்ளே இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கலக்கம் ஏற்பட்டிருக்கும்” என்று பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

“தங்களுக்கும் என்ன நடக்குமோ என்பது பற்றி சிந்திப்பார்கள். தண்டனைக்கான வாய்ப்பு அவர்களுக்கும் உள்ளது. இதற்கு மேலாக இதனை இயக்கிய ஒரு சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதி ஒருவரும் இருக்கின்றார். அவருக்கு இப்போது காய்ச்சல் பிடித்திருக்கும். ஏனையவர்களுக்கு இவ்வாறான தண்டனை என்றால் தமக்கு கிடைக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று அவரும் சிந்திப்பார்” எனவும் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.