மஹர சிறைச்சாலையில் நேற்று (01) முன்தினம் ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று (01) முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக மறுஅறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நேற்று (1) பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் நிலவிய அசாதாரண சூழ்நிலை கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கைதிகள் அனைவரும் மீண்டும் அவர்களது சிறை அறைகளுக்குள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சில கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டடம், அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை என்பன சேதமாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகக் காயமடைந்த சிறைக் கைதிகளில் 7 பேர் ராகமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.



